

ஊரடங்கு உத்தரவையொட்டி ஆள் கிடைக்காதது, போக்குவரத்து இல்லாதது போன்ற காரணங்களால் காய்கறிகளை நகரங்களுக்கு கொண்டு வர முடியாமல் கிராமங்களிலேயே முடங்கின. மேலும் சிவகங்கையில் சின்னவெங்காயம் கிலோ ரூ.140-க்கு விற்பனையானது.
கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசி பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என, மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இதற்காக காய்கறி, பலசரக்கு, பால், இறைச்சி, கோழிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு தேவையான காய்கறிகளில் 50 சதவீதம் மதுரை, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. மீதி உள்ளூர் கிராமங்களில் விளையும் காய்கறிகள் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன.
சிவகங்கை அருகே சாலூர், கவுரிப்பட்டி, மேலக்காடு, காரைக்குடி அருகே பெரியகோட்டை, கல்லல் அருகே ஆளவிலாம்பட்டி, காளையார்கோவில் அருகே சூசையப்பர்பட்டினம், ஆண்டிச்சியூரணி, சிங்கம்புணரி அருகே உலகம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நகரப்பகுதிகளுக்கு காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
தற்போது ஊரடங்கு உத்தரவால் விவசாயத் தொழிலாளர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பயிடுதல், களையெடுப்பு, காய்கறிகள் பறிப்பு போன்ற விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காதநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து வசதியும் முடங்கியதால் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு பிறப்பித்த மூன்று தினங்களிலேயே வியாபாரிகள் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்க தொடங்கியுள்ளனர். சிவகங்கை, காரைக்குடி பகுதியில் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.120 முதல் ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கத்திரிக்காய் ரூ.100, வெண்டைக்காய் ரூ.70, தக்காளி ரூ.50 போன்றவற்றின் விலையும் இருமடங்காக உயர்ந்துள்ளது.
இதேநிலை தான் தமிழகம் முழுவதும் உள்ளது. எனவே விவசாயத் தொழிலாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்தவும், போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி காய்கறிகள் தடையின்றி கிடைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.