

வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நாய்கள், கால்நடைகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் ஆகியவற்றுக்கு விலங்கின ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கால்நடைப் பராமரிப்புத் துறை ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கால்நடை, கோழி, முட்டை, இறைச்சி, கால்நடை மற்றும் கோழித்தீவனம் ஆகியவற்றின் நகர்வுகளுக்கும், ஆதரவற்ற செல்லப் பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கும் உணவு வழங்குவதற்கும் ஊரடங்கு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்று தமிழ்நாட்டில் தீவிரமாகாமல் தடுக்க தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களின் நன்மை கருதி போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாவட்ட எல்கைகளும் மூடப்பட்டுள்ளன.
எனினும் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியவாசியத் தேவைகளுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெறவும், கால்நடை, கோழி, முட்டை, இறைச்சி, கால்நடை மற்றும் கோழித்தீவனம் ,கால்நடை தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளுக்கும் விலக்கு அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் காணொலி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை கோழி, மீன், முட்டை, இறைச்சி கால்நடை மற்றும் கோழித்தீவனம், கால்நடை தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளை அனுமதிக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களையும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நாயினங்கள், மற்றும் கால்நடைகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் ஆகியனவற்றுக்கு விலங்கின ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும், செல்லப் பிராணிகள் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள செல்லப் பிராணிகளுக்கு உணவு வழங்கவும் ஏதுவாக தகுந்த அறிவுரைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உணவின்றி சிரமப்படும் நாயினங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றிற்கு உணவு அளிக்கவும், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படும் ஆதரவற்ற கால்நடைகள் மற்றும் பிராணிகள் நலன் பேணுதல் குறித்த தகவல்களை உடனுக்குடன் கவனிக்க கால்நடை பராமரிப்புத் துறையால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கென பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-5880 மற்றும் 1962 ஆகியவை மூலமும், anh.tn@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இது குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்''.
இவ்வாறு கால்நடை பராமரித்துறை தெரிவித்துள்ளது.