

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி பைக்கில் சுற்றும் இளைஞர்களை லத்தியால் பதம் பார்க்காமல், கரோனா குறித்த கேள்விளைக் கொடுத்து தேர்வெழுத வைப்பதுடன் திருக்குறளையும் கூறி விளக்கம் அளிக்க செய்து போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த அணுகுமுறையை அனைத்து தரப்பினரிடையேயும் பாராட்டைப் பெற்றுள்ளது.
நாடெங்கும் கரோனா ஊரடங்கை கடைபிடிக்க போலீஸாரும், மாவட்ட நிர்வாகத்தினரும் திணறி வருகின்றனர். இதில் பல இடங்களில் கரோனா குறித்த அச்சமின்றி சாலைகளில் சுற்றித்திரியும் இளைஞர்களை போலீஸார் லத்தியால் அடிப்பதும், கடினமாக போக்கைக் கடைபிடிப்பதும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.
இவற்றிற்கு மத்தியில் குமரி மாவட்டத்தில் ஊரடங்கிற்கு மத்தியில் உரிய காரணமின்றி சாலைகளில் வலம் வருவோருக்கு தவறுகளை உணரும் வகையில் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுப்பூர்வமான தண்டனை வழங்குகின்றனர்.
தமிழக, கேரள எல்லை பகுதியை ஒட்டிய மார்த்தாண்டம், களியக்காவிளை, குழித்துறை போன்ற பகுதிகளில் அவசர தேவையோ, பிற காரணங்கள் இன்றி ஊரடங்கை மதிக்காமல் மோட்டார் சைக்கிள், மற்றும் வாகனங்களில் சுற்றும் இளைஞர்களை இறங்கசொல்லும் போலீஸார் கரோனா குறித்த 10 வினாக்கள் அடங்கிய கேள்வித்தாளை கொடுத்து தேர்வு எழுத சொல்கின்றனர்.
அதில், கரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு?, கரோனா வைரஸின் காதலியின் பெயர்? கரோனாவினால் அதிகமாக பாதிக்கும் உடல் பகுதி? கரோனாவில் இருந்து நம் நாட்டை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்? போன்ற 10 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கேள்வி ஒன்றிற்கு 1 மதிபபெண் வீதம் 10 மதிப்பெண் வழங்கப்படுகிறது. சாலையோரம் அமர்ந்து தேர்வெழுத கூறியதும், இளைஞர்கள் திணறுவதையும் காணமுடிகிறது. இதில் பலர் 5 மதிப்பெண், 7 மதிப்பெண், 3 மதிப்பெண் என எடுத்தனர்.
தவறான பதில் ஒவ்வொன்றிற்கும் 10 தோப்புகரணம் போடவைத்து பின்னர் அதற்கான பதிலை அவர்களிடம் கூறி கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். மேலும் 144 தடை உத்தரவை மீறுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்தும் விளக்கினர்.
குழித்துறை ஆற்றுப்பாலத்தில் வாகனத்தில் சுற்றியோருக்கு இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்..
இதைப்போல நாகர்கோவில் ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையிலான போலீஸார் ஊரடங்கை மீறுவோரை நிறுத்தி ஏதாவது சில திருக்குறளை கூறவைத்து அதற்கு விளக்கம் அளிக்க செய்தனர்.
இதனால் குமரியில் சாலைகளில் வலம்வந்த இளைஞர்கள் தேர்வு எழுதும் தண்டனைக்கு பயந்து ஊரடங்கை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
மேலும் குமரி மாவட்டத்தில் ஊரடங்கை மதிக்காமல் வருவோரை லத்தியால் தாக்கவேண்டாம். சரியான காரணம் தெரிவிக்காமல் சுற்றுவோரின் வாகனத்தை பறிமுதல் செய்யுங்கள், அல்லது அவர்கள் உணரும்படி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என எஸ்.பி. ஸ்ரீநாத் போலீஸாரிடம் அறிவுறுத்தியள்ளார்.