

மதுரையில் ‘கரோனா’ வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர் குடும்பத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கு, இந்த வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை அண்ணா நகரை சேர்ந்த 54 வயது கட்டுமான ஒப்பந்ததாரர் ‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.
அவர் தாய்லாந்தில் இருந்து வந்த சிலரை சந்தித்ததாக அவரது உறவினர்கள் கூறினர். அவர்களைப் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு ‘கரோனா’ வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.
அவருக்கு யாரிடம் இருந்து இந்த தொற்று வந்தது என்பது இதுவரை தெரியவில்லை. அதனால், சமூக பரவலாக இந்த நோய் மதுரையில் பரவிவிட்டதா? என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இன்று அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ‘கரோனா’ பரிசோதனை மையத்தை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று நேரில் பார்வையிட்டார்.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.