

கரோனா பாதிப்பால், விளைபொருட்களை விற்க முடியவில்லை என்று தமிழக விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனாவால் முடங்கியிருக்கும் தேசத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாஜக அரசு அறிவித்த விவசாயிகளுக்கான ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாயில் முதல் தவணை இரண்டாயிரம் ரூபாய் உடனடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருப்பதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். அதேநேரத்தில் 21 நாள் ஊரடங்கால் தற்போது தேக்கத்தில் கிடக்கும் தங்கள் விளை பொருட்களைப் பற்றியும், அதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.
ஆறுமாத காலம் உழைத்துக் கரைசேர்த்த நெல்லை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர் தமிழக விவசாயிகள். ஊரடங்கு நிலையால் கொள்முதல் நிலையங்கள் செயல்படாத நிலையில், தனியார் வியாபாரிகளும் வரவில்லை. அந்த நெல்லை மூட்டைகளில் கட்டிச் சேமித்து வைக்கப் போதுமான சாக்குகளும், இடமும் இல்லாததால் களத்து மேட்டிலும், சாலையோரங்களிலும் நெல்லைக் கொட்டிவைத்து விட்டு இரவுபகலாக அங்கேயே படுத்து உறங்குகிறார்கள். அதேபோல், நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயிகளும் அதனை விற்க முடியாமல் கொல்லையிலேயே குவித்து வைத்துவிட்டுக் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகள் மற்றும் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில், விளை பொருட்களை விற்க முடியாததால் கடனைக் கட்டமுடியாமல் வட்டியும் எகிறிக்கொண்டே போவதால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
அதனால், தங்களது விளைபொருட்களைக் கொள்முதல் செய்வது குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளதால் தங்கள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.