கரோனா தடுப்பு நடவடிக்கை: 1,200 மருத்துவர்கள், பணியாளர்கள் உடனடி நியமனம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

கரோனா தடுப்பு நடவடிக்கை: 1,200 மருத்துவர்கள், பணியாளர்கள் உடனடி நியமனம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு
Updated on
1 min read

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உடனடி மருத்துவத் தேவைக்காக 1,200 மருத்துவர்கள், லேப் டெக்னீஷியன்களைப் பணி நியமனம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 200 ஆம்புலன்ஸ்களை வாங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் சமுதாயப் பரவல் நிலையை நோக்கிச் செல்லாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கை கடைப்பிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், உள்துறைச் செயலர் பிரபாகர், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்ட முடிவில் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவரது அறிவிப்பு:

''கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைப் பணியமர்த்த சிறப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கத்துடன் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில் 1508 ஆய்வக நுட்புனர் (லேப் டெக்னீஷியன்) 530 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பணியாளர்கள் ஆணை கிடைக்கப்பட்ட உடன் மூன்று தினங்களுக்குள் உடனடியாகப் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 200 அவசர கால ஊர்தி (ஆம்புலன்ஸ்) பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in