

கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் தீயணைப்புத் துறை வாகனங்கள் மூலம் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கிருமி நாசினி நாசினி தெளிக்கப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக இதுவரை மனிதா்கள் மூலமும், சாதாரண இயந்திரங்கள், ட்ரோன்கள் மூலமாகவும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இதன் ஒருபகுதியாக தீயணைப்புத் துறையின் வாகனங்கள் மூலம் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகையாக தண்ணீரில் கிருமி நாசினியைக் கலந்து பீய்ச்சி அடிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
தமிழகத்தில் 346 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில் 7,500 தீயணைப்புப் படை வீரா்களும் பணியாற்றுகின்றனர்.
தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை மூலம் கண்டறியப்பட்ட பகுதிகளில் பகுதிகளில் தீயணைப்புத் துறை வாகனங்கள் மூலம் கிருமி நாசினி பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் மக்கள் நெரிசல் மிகுந்த காய்கறிச் சந்தைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், மருத்துவமனை வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் இப்பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் (வியாழன் மற்றும் வெள்ளி) தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தீயணைப்புத் துறை வாகனங்கள் மூலம் கிருமி நாசினி பீய்ச்சி அடிக்கப்பட்டதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
-எஸ்.முஹம்மது ராஃபி