

பழநியில் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் ஒன்றான காவடிக்கு புகழ்பெற்ற பங்குனி உத்திரதிருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலின் முக்கியவிழாக்களாக தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளது.
பங்குனி உத்திரதிருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துவந்து சுவாமியை வழிபட்டுச்செல்வர்.
இந்த ஆண்டு பங்குனி உத்திரதிருவிழா மார்ச் 31 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற இருந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கை முன்னிட்டு பக்தர்கள் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க பங்குனி உத்திரதிருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆகமவிதிகளுக்கு உட்பட்டு அனைத்து நித்யபூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும். இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.