Published : 27 Mar 2020 02:08 PM
Last Updated : 27 Mar 2020 02:08 PM

144 தடை உத்தரவை மீறிய 4,100 பேர் மீது வழக்குப்பதிவு: தமிழகம் முழுவதும் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

நேற்று ஒரே நாளில் 144 தடை உத்தரவை மீறிய 4,100 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. தடையை மீறுபவர்களைக் கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சமுதாயப் பரவல் வந்துவிடாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. 21 நாள் சமூகத் தனிமையைக் கடைப்பிடிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், வழக்கம்போல் சிலர் அரசின் உத்தரவை அலட்சியம் செய்து வீதிகளில், சாலைகளில் வாகனங்களில் சுற்றுவதால் போலீஸார் கடும் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்திருந்தனர். நேற்று தமிழகம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இன்றும் அலட்சியமாக உலா வந்த பலர் மீது தமிழகம் முழுவதும் போலீஸார் பலவேறு வழக்குகளைப் பதிவு செய்தனர்.

சாலையில் அத்தியாவசியத் தேவைக்காக வருவோரைவிட நிலைமையின் தீவிரத்தை உணராமல், காரணமின்றி ஜாலிக்காக சுற்றும் நபர்கள், போலீஸார் பிடிக்கும்போது ஏதாவது சாக்குப்போக்கு சொல்கின்றனர். தமிழகம் முழுவதும் இப்படிச் சுற்றும் நபர்களை தோப்புக்கரணம் போடவைப்பது, அரைமணி நேரம் கைதட்ட வைப்பது, திருக்குறளை ஒப்பிக்க வைப்பது என நூதன தண்டனைகளை போலீஸார் கொடுக்கின்றனர்.

பல இடங்களில் வாகனங்களைப் பறிமுதல் செய்வது, வழக்குப் போடுவது, கைது செய்து விடுவிப்பது போன்ற நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபடுகின்றனர். நேற்று முன் தினம் முதல் நாளில் 8,126 பேர் கைது செய்யப்பட்டு 1400 வழக்குகள் வரை போடப்பட்டன.

நேற்று தமிழகம் முழுவதும் தடையை மீறி ஜாலி ரைடு வந்ததாக வெளியே சுற்றியவர்கள் மீது 4,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மீது பிரிவு 188 (அடிபணிய மறுத்தல்), 269 (தொற்று நோய் பரப்புதல்), 270 (ஆபத்தான உயிரிழப்பை ஏற்படுத்தும் தொற்று நோய் பரவக் காரணமாக இருத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அடுத்து வரும் நாட்களில் இதை உறுதியாக கட்டுப்படுத்த தமிழக அரசின் உத்தரவின்படி நோய் பரவுதல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு இடையூறு இல்லாமல் செல்ல உதவுவது உள்ளிட்ட காவல்துறைப் பணிகளை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஒருங்கிணைப்பு கமிட்டியை அமைத்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கமிட்டியில் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஜெயந்த் முரளி, சேஷ சாயி, தாமரைக்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x