

மக்கள் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்கள் பணியின்போது முகக்கவசம் அணிந்தும், வீடு திரும்பியதும் கைகளைக் கழுவியும் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை சகோதர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்
இன்றைக்கு 130 உலக நாடுகளை உலுக்கும் கொரோனா என்ற வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நமது முதல்வரும் தமிழகத்தில் இந்த கரோனா வைரஸால் யாரும் பலியாகக் கூடாது என்று இரவு பகல் பாராது அயராது கடுமையாக உழைத்து வருகிறார்.
நாள்தோறும் மாவட்டம்தோறும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இது குறித்து ஆய்வு செய்து அதன்மூலம் மக்களுக்கு பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
மாண்புமிகு முதலமைச்சர் வெளியிடும் அறிக்கைகளை ஊடகத்துறையினர் பத்திரிகை துறையினர் சிறப்பாக வெளியிட்டு மக்களை காக்கும் புனிதப் பணியில் நீங்கள் ஈடுபட்டு இதன் மூலம் மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியீடு வரும் உங்கள் பணி மிகவும் இன்றியமையாதது.
நீங்கள் இந்த புனிதப் பணியில் மேற்கொள்ளும்போது முகத்தில் முககவசமும், கையில் உறையும், சமூக இடைவெளிவிட்டு இருக்க வேண்டும் அதேபோல் பணி முடிந்து நீங்கள் வீட்டுக்கு வரும்பொழுது கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும் ஏனென்றால் மக்களைக் காக்கும் இந்தப் புனிதப் பணியில் நீங்களும் உங்களை காத்துக் கொள்ள வேண்டும். நீங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதுதான் நமது முதலமைச்சரின் எண்ணமாகும்.
ஆகவே எனது அருமை பத்திரிக்கை நண்பர்களே மக்கள் பணியில் ஈடுபடும் நீங்களும் உங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு இந்த அன்பான வேண்டுகோளை விடுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.