

மதுரையில் கொள்ளை நோயான ‘கரோனா’ வேகமாகப் பரவும் நிலையில் பெண் ஒருவர், ‘கரோனா’ தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார், மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு 9 வகை மூலிகைகளால் தயாரான காபி, கருப்பட்டி காபி, பருத்திப் பால், பாசிப்பயறு, வடை போன்றவற்றை தயார் செய்து, அசாத்திய துணிச்சலுடன் இருச்சக்கர வாகனத்தில் சென்று இலவசமாக வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘கரோனா’ அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனர்.திறந்துவைக்கப்படும் என உறுதி கூறப்பட்ட ஹோட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் கூட பெரும்பாலான இடங்களில் திறக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டமே இல்லாத இந்த அசாதாரண சூழலில் அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்லும் சுகாதாரப் பணியாளர்கள், போலீஸார் தினமும் அச்சத்திலேயே தங்கள் பணிகளுக்கு சென்று வீடு திரும்புகின்றனர்.
ஆனால், மதுரையில் எட்வின் ஜாய் என்ற பெண் ஒருவர் அசாத்திய துணிச்சலுடன் வெளியே வந்து கரோனா ஒழிப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார், மாநகராட்சிப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கருப்பட்டி காபி, முலிகை காபி, வடை, பாசிப்பயிறு, லெமன் ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு வகை நோய் எதிர்ப்பு சக்திகொண்ட திட, திரவ உணவுப்பொருட்களை இலவசமாக தாயுள்ளத்தோடு வழங்கி சேவை செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மதுரை பெத்தானியாபுரம் பாண்டியன் நகரை இவர், ஏற்கெவே மாநகராட்சி 100 வார்டுகளில் தனி நபராக வீடு, வீடாகச் சென்று மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மேற்கொண்டு 300-க்கும் மேற்பட்ட மக்களை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தச் செய்தார்.
அதற்காக குடியரசு தினவிழாவில் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் அவரை பாராட்டி விருதும், சான்றிதழும் வழங்கினார்.
தற்போது ‘கரோனா’ பரவும் நிலையில் மக்கள் நடமாட்டமே இல்லாத சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் சென்று போலீஸார், மாநகராட்சி பணிகளுக்கு, அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு பல்வகை மூலிகை காபி, உணவுப்பொருட்களை வழங்கி வழங்கி வருகிறார்.
இதுகுறித்து எட்வின்ஜாயிடம் கேட்டபோது, ‘‘இறைவன் எனது குடும்பத்திற்கு போதுமான வசதியை கொடுத்துள்ளார். குழந்தைகள் நல்லநிலையில் உள்ளனர்.
வீட்டில் சும்மா இருந்து நேரத்தை வீணடிக்காமல் என்னால் முடிந்த சேவைகளை செய்கிறேன். ‘கரோனா’ பரவும் இந்த நேரத்தில் சுகாதாரப்பணியாளர்கள்,காவல்துறையினர் சேவை முக்கியமானது. வீட்டிற்குள் பாதுகாப்பாக முடங்கி கிடக்கும் நமக்காக அவர்கள்
கண்ணுக்குத் தெரியாத வைரஸ்களுடன் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள். அவர்கள் உடல் ஆரோக்கியம் முக்கியமானது. அதனால், இந்த ‘கரோனா’ காய்ச்சல் ஒழியும் வரை அவர்களுக்கு என்னால் முடிந்தளவு நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுப்பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளேன். கடந்த 3 நாளாக இப்பணியை செய்கிறேன்.
முதல் நாள் லெமன் ஜூஸ், பாசிப்பயிறு கொடுத்தேன். நேற்று இரண்டாவது நாள் 9 மூலிகைகள்(சுக்கு, மல்லி, மிளகு, திப்லி, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், மஞ்சள், மிளகு) கொண்ட காபி, கருப்பட்டி காபி, வடை கொடுத்தேன். இன்று சுக்கு காபி, பருத்தி பால், சுண்டல் செய்து கொடுக்கிறேன்.காலை 10 மணிக்கு வீட்டிற்கு அருகே உள்ள குரு தியேட்டரில் ஆரம்பித்து ஆரப்பாளையம், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, சிம்மக்கல், பெரிய போஸ்ட் ஆபீஸ், மேலமாசி வீதி, ரயில்வே ஸ்டேஷ், பெரியார் பஸ்நிலையம், மாநகராட்சி மேற்கு மண்டலம் அலுவலகம், அரசரடி, ஜெயில் ரோடு, கரிமேடு போலீஸ்நிலையம்,காளவாசல், பழங்காநத்தம் வரை சென்று வழங்குகிறேன்.
நமக்காக அவர்கள் சேவை செய்கிறார்கள். அவர்களுக்கு நாமும் முடிந்த சேவை செய்ய வேண்டும், ’’ என்றார்.