

கரோனா வைரஸ் சமூகப் பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடியில் பேருந்து நிலையம் காய்கறி மார்க்கெட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தற்போது சமூகப் பரவலை எட்டும் நிலையில் உள்ளதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியினை பொறுத்தமட்டில் மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள காமராஜர் காய்கறி மார்க்கெட் மிகவும் குறுகலான பகுதியில் செயல்பட்டு வந்தது.
இந்த காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் தொற்று நோய் அபாயம் ஏற்படலாம் என்று கருதி மாநகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட்டினை இன்று முதல் பழைய பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்றியுள்ளது.
மிகவும் விரிவான இடப்பகுதி என்பதால் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் காய்கறி வாங்கி சொல்ல இது வசதியாக மாறியுள்ளது. மேலும் ஒவ்வொருவரும் 1 மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கிச் செல்லும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளது.
காய்கறி வாங்க வருபவர்கள் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே காய்கறி வாங்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும் மாநகராட்சி ஊழியர்கள் தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக மாற்றப்பட்டுள்ள பழைய பேருந்து நிலைய வளாகம் முழுவதிலும் கிருமி நாசியினை தெளித்து வருகின்றனர்.