

பலசரக்கு, மருந்து வாங்கச் செல்வதாகக் கூறி தமிழகம் முழுவதும் இருசக்கரவாகன ஓட்டிகள் அதிகளவில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இதை முற்றிலும் தடுப்பதற்காக அத்யாவசியப் பொருட்கள் அனைத்தையும் வீடுகளிலே வழங்கும் திட்டம் தேனி மாவட்டம் சின்னமனூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில, வர்த்தகத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் காய்கறி, பால், பலசரக்கு, மருந்து உள்ளிட்டவற்றிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூட்டமாக வராமல் தனித்தனியே வந்து இவற்றை கொள்முதல் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் அரசு உத்தரவிற்கு மாறாக ஏராளமானோர் இருச்சக்கரவாகனங்களில் நகரங்களில் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர்.
போலீஸார் இவர்களை விசாரிக்கும் போது, பலசரக்கு, மருந்து வாங்கச் செல்கிறோம் என்று கூறுகின்றனர். பலரும் இதே காரணங்களைக் கூறுவதால் இவர்களை கட்டுப்படுத்துவதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம், லத்தியால் அடித்தல் என்று பிரச்னை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஊரடங்கு நேரத்தில் இந்நிலை பல்வேறு சர்ச்சைகளையும், விவாதங்களையும் கிளப்பி வருகிறது.
எனவே இது போன்ற தவிர்க்க தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதன்படி 2 ஆட்டோ, 3 இருசக்கரவாகனங்கள் அத்யாவசியப் பொருட்களை வீடுகளில் சென்று டெலிவரி செய்வதற்கான அனுமதியை நகராட்சி நிர்வாகம் அளித்துள்ளது. பொதுமக்கள் பலசரக்கு, மருந்து, இறைச்சித் தேவைகளுக்காக தொடர்பு கொண்டால் இந்த வாகனங்கள் மூலம் நேரடியாக வீடுகளுக்கு பொருட்கள் அனுப்பிவைக்கப்படும். இதன் மூலம் சாலைகளில் தேவையின்றி இருசக்கரவாகனங்களில் சுற்றித்திரியும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் ஷியாமளா கூறுகையில், வணிகர், மருந்து, இறைச்சி கடை சங்க முக்கிய நிர்வாகிகளை அழைத்து இத்திட்டம் குறித்து பேசினோம். இதன்படி அத்யாவசியப் பொருட்களை கொண்டு செல்ல குறிப்பிட்ட ஆட்டோ, இருசக்கரவாகனங்கள் மட்டும் இயங்க அனுமதிச்சீட்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப்பட்டியல் போலீஸாருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அத்யாவசியப் பொருட்கள் எவ்வித தடையும் இன்றி வீடுகளுக்குச் சென்றடையும், பொதுமக்களும் ஊரடங்கின் போது வெளிவர வேண்டிய அவசியம் இருக்காது. ஆட்டோ செல்ல முடியாத இடங்கள், குறைவான பொருட்கள் இருக்கும் போது இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தி டெலிவரி செய்யப்படும். காய்கறி விநியோகத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
சின்னமனூரில் அத்யாவசியப் பொருட்களை வீடுகளில் விநியோகிப்பதற்கான வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டு
வர்த்தகர்கள் கூறுகையில், இத்திட்டத்திற்காக வாட்ஸ்அப் அல்லது மொபைல்எண் ஒன்றை நகராட்சி ஒப்புதலுடன் காட்சிப்படுத்த உள்ளோம். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை இதில் தெரிவித்தால் அவர்கள் விரும்பும் கடைகளில் கொள்முதல் செய்து சப்ளை செய்ய இருக்கிறோம்.
நெட்பேங்கிங் மூலம் பணத்தை செலுத்தலாம் அல்லது பொருட்களைப் பெறும் போது கொடுக்கலாம். ஊரடங்கின் போது பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தடுக்க இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.