

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உயிரைப் பணயம் வைத்துப் பணிபுரிய மருத்துவமனைக்குச் சென்ற மருத்துவர்களுக்கு பூக்கள் கொடுத்து புதுச்சேரியில் போலீஸார் உற்சாகப்படுத்தினர்.
கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனை, ஜிப்மர் ஆகியவற்றில் வெளிப்புற சிகிச்சைகள் ரத்தாகியுள்ளன. அவசர காலச் சூழலில் புதுச்சேரியில் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தொடர்ந்து சேவை புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், உயிரைப் பணயம் வைத்துச் செயல்படும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இன்று (மார்ச் 27) காலையில் பணிக்குச் சென்றபோது சாலையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களை உற்சாகப்படுத்த பூக்களை அளித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ள நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவத் துறையினர் நேரடியாக உயிரைப் பணயம் வைத்து உழைக்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தவே பூக்களை வழங்கினோம். அதே நேரத்தில் உத்தரவுகளை மீறிச் செல்வோரையும் தொடர்ந்து எச்சரிக்கிறோம்" என்று தெரிவித்தனர்.