

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வந்த 2114 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
இதேபோல், தென்காசி மாவட்டத்திற்கும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள 1076 ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக உள்ளது. இவர்களில் நெல்லை அரசு மருத்துவமனையில் ஒருவர் கரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு 72 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கரோனா தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டன. பொதுவாக 4 முதல் நான்கரை மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு பரிசோதனை முடிவு தெரிவிக்கப்பட்டுவிடுகிறது.
இந்த நபருக்கு சோதனை முடிவு தெரிவிக்கப்பட்டதா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
வெளிப்படைத்தன்மை இல்லை: மக்கள் அதிருப்தி
கரோனா வைரஸ் தாக்கம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்திட 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட கட்டுப்பாட்டு மையம் சுகாதாரத்துறையினருடன் இணைந்து 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படுகிறது.
ஆனால், ஆனால் காய்ச்சல் பாதிப்புடன் இம்மையத்துக்கு தொடர்பு கொள்ளும் நபர்களை உடனுக்குடன் அரசு மருத்துவமனைகளில் சேர்த்து ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் சுணக்கம் காணப்படுகிறது.
பாளையங்கோட்டை சேவியர் காலனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தது. பெங்களூரிலிருந்து திரும்பிய அவர், எங்கு சென்று சிகிச்சை பெறுவது என்பதில் குழப்பத்துடன் இருந்துள்ளார்.
இது தொடர்பாக தனக்குத் தெரிந்த நபர்களிடம் கேட்டபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
அதன்படி அவரும் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டபோது உரிய பதிலை தெரிவிக்காமல் தட்டிக்கழித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பலர் கவலை, அதிருப்தி தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
அகதிகள் முகாம் அறிவிப்புப் பலகை..
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரம் அகதிகள் முகாமில் வெளியாட்கள் உள்ளே வர அனுமதியில்லை எனக் கயிறுகளை கட்டி வாசகங்கள் எழுதி உள்ளனர்.
ஒருசில பகுதிகளில் ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டாலும் சில பகுதிகளில் மக்கள் பொறுப்பின்றி கூட்டம் கூடினர். பாளையங்கோட்டை பாரதிநகரில் புதிதாக அமைக்கப்பட்ட காய்கறி மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவையும் மீறி கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வந்தனர்.