கரோனா அச்சம்: குப்பையில் கொட்டப்படும் மலர்கள்; விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குக; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்
ராமதாஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

மலர்களைப் பயிரிடும் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான இழப்பைச் சந்தித்து வருவதாகவும், அதனால், மலர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று (மார்ச் 27) மூன்றாவது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், கரோனா அச்சம் காரணமாக மலர்களைச் சந்தைப்படுத்த முடியவில்லை எனவும், அதனால் மலர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 27) தன் ட்விட்டர் பக்கத்தில், "கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட மலர் வகைகளைப் பறித்தும், கரோனா அச்சம் காரணமாக சந்தைப்படுத்த முடியவில்லை. வாங்க ஆளில்லை. அதனால் டன் கணக்கில் மலர்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன!

மலர்கள் குப்பையில் கொட்டப்படுவதால் மலர் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். அவர்களின் இழப்பை அரசும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதற்காக மலர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in