

கரோனா வைரஸ் அச்சத்தால் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சாலைகளை அடைத்து 4 கிராமங்களை மக்களே முடக்கினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் கிராமங்களை முடக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் தங்களது நாடுகளை தனிமைப்படுத்தி வருகின்றன. இதையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வாகனங்களில் செல்வோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸார் கெடுபிடி காட்டுவதால், வாகனங்களில் செல்வோர் கிராமச்சாலைகளை பயன்படுத்துகின்றனர்.
இதையடுத்து கரோனா வைரஸ் அச்சத்தால் வாகனங்களில் செல்வோரைத் தடுக்க திருப்புவனம் அருகே கே.பெத்தானேந்தல் ஊராட்சியைச் சேர்ந்த கே.பெத்தானேந்தல், மணல்மேடு, ஒத்தவீடு, பெத்தானேந்தல் காலனி ஆகிய 4 கிராமங்களுக்கு செல்லும் சாலைகளை கிராமமக்கள் ஒத்துழைப்போடு ஊராட்சி நிர்வாகமே முட்களை கொண்டு அடைத்தது. மேலும் வைகை ஆற்று வழியாக வராமல் இருக்க ஆற்றில் பள்ளம் தோண்டினர்.
இதேபோல் சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊராட்சி நிர்வாகம் மூலம் கிராமங்களை முடக்க ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மணல்மேடு ராஜா கூறியதாவது: எங்கள் 4 கிராமங்களிலும் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். எங்கள் கிராமங்கள் வழியாக ஏராளமான வெளியூர் வாகனங்கள் வந்து சென்றன. அவர்களை தடுக்க முடியவில்லை. இதனால் மடப்புரத்தில் இருந்து வரும் சாலையில் கணக்கன்குடி அருகே முள்வேலியால் தடுப்பு அமைத்தோம். அதேபோல் லாடனேந்தலில் இருந்து வரும் வைகை ஆற்று வழியையும் குழியை தோண்டினோம்.
இதேபோல் மற்றொரு சாலையையும் அடைத்து விட்டோம். அத்தியாவசிய தேவை, மருத்துவத்திற்காக சென்று வரும் உள்ளூர் நபர்களை மட்டும் அனுமதிக்க எல்லையில் ஆட்களை நியமித்துள்ளோம், என்று கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கே.பெத்தனேந்தலில் ஊருக்குள் வர முடியாதபடி வைகை ஆற்றில் பள்ளம் தோண்டினர்.