

அடுத்தகட்டம் நோக்கி முன்னேற வேண்டிய நேரம் இது என்று கமல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று நாளுக்கு நாள் இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 724 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 17 பேர் பலியாகியுள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கு என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர்.
இதனிடையே, வீட்டிற்குள் இருத்தல் என்பது முதல் படிதான். அதுமட்டுமே தீர்வாகாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதை மேற்கோளிட்டு கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"வீட்டின் உள் இருத்தல் என்பது முதல் படிதான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது"
இந்த ட்வீட்டுடன் தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் இருவரின் ட்விட்டர் கணக்கையும் குறிப்பிட்டுள்ளார் கமல்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் முதல் முறையாக ஓடிசாவில் 1000 படுக்கையறைகள் கொண்ட மருத்துவமனை ஒன்று கரோனாவுக்கு பிரத்யேகமாக உருவாகவுள்ளது. இதற்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.