

வீடுகளுக்கே வந்து மளிகை பொருட்களை வழங்கும் திட்டத்தை வணிகர் கூட்டமைப்புடன் இணைந்து புதுச்சேரி அரசு தொடங்கியுள்ளது. இதற்கு பிரத்யேகமாக கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் பலருக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய புதுச்சேரி அரசு வணிகர் கூட்டமைப்புடன் இணைந்து புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருண் கூறுகையில், "பொதுமக்களுக்குத் தேவையான மளிகை பொருட்களை போனிலோ, இணையத்திலோ ஆர்டர் செய்யலாம். வீடுகளுக்கே மளிகை பொருட்கள் வரும். அதற்குரிய விலை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
ஆர்டர் செய்த 24 மணிநேரத்துக்குள் பொருட்கள் வந்தடையும். புதுச்சேரி பிராந்தியத்திலுள்ள 23 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வணிகர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், பொதுமக்கள் குறிப்பிடும் பொருட்களை பதிவு செய்து வீட்டுக்குக் கொண்டு வந்து தருவார்கள்.
http://bit.ly/PTFSuply என்ற இணையதள முகவரியில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆர்டர் செய்யலாம்.
கிராமப்பகுதிகளில் மளிகை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க சுய உதவிக்குழுக்கள் மூலமும் விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் கூறுகையில், "புதுச்சேரி பிராந்தியத்திலுள்ள 23 தொகுதிக்கும் பொருட்களை வீட்டுக்கு வந்து விநியோகிக்க ஒரு நிர்வாகி நியமித்துள்ளோம். அவர் மூலம் அத்தொகுதி முழுக்க தங்கு தடையின்றி விநியோகிக்க முடியும். மேலும், தகவல் அறிய விரும்புவோர் 94432 39933, 99440 71712 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம். பிரத்யேக கட்டணம் இதற்கு இல்லை" என்று தெரிவித்தார்.
இத்திட்டம் இன்று நடைமுறைக்கு வருகிறது. இதர பிராந்தியங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு முடிவு எடுத்துள்ளது.
காய்கறியும் விநியோகிக்கலாம்: பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "அத்தியாவசிய தேவைகளான காய்கறியையும் அரசு தரப்பு வீட்டுக்கு வந்து தரும் ஏற்பாட்டை செய்தால் பொது இடத்துக்கு வருவோர் எண்ணிக்கை மேலும் குறையும்" என்றனர்.