

தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளை அனுமதிக்காமல் வார்டுகளை ‘கரோனா’ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயாராக வைத்திருங்கள் என்று சுகாதாரத்துறை அந்த மருத்துவமனை நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் வேகமாகப் பரவுகிறது. இந்த நோயாளிளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் போதுமான வார்டுகளும், மருத்துவ உபகரணங்களும், பாதுகாப்பு வசதிகளும் இல்லை.
அதனால், தற்போது சுகாதாரத்துறை, ‘கரோனா’ சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதனால், தனியார் மருத்துவமனைகளில் விபத்து, மாரடைப்பு உள்ளிட்ட அவசர உயிர் காக்கும் சிகிச்சைகளை தவிர மற்ற சிகிச்சைகளுக்கு உள் நோயாளிகளை அனுமதிக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், ‘‘கார்ப்ரேட் மருத்துவமனைகள், மற்ற மருத்துவமனைகள், சிறிய கிளினிக்குகளில் தற்போது உள் நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதில்லை.
கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மட்டும் விபத்து, மாரடைப்பு உள்ளிட்ட மிக அவசரமான சிகிச்சைகளுக்கு மட்டும் நோயாளிகள் அனுமதிக்கலாம் எனக் கூறியுள்ளனர். ஆனால், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் விபத்துகள் நடப்பதில்லை. அதனால், தனியார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகள் தற்போது முற்றிலும் அனுமதிக்கப்படவில்லை.
நுரையீரல், இதயம், சிறுநீகரம் உள்ளிட்ட அனைத்து மருத்துவப்பிரிவுகளில் சிகிச்சைப்பெற்று வந்த உள் நோயாளிகள் பெரும்பாலோனரை கடந்த ஒருவாரத்திற்கு முன்பாக டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். அதனால், ஏற்கணவே தனியார் மருத்துவமனை வார்டுகள் காலியாகவே உள்ளன.
இந்த வார்டுகளில் ‘கரோனா’ நோயாளிகள் அதிகரிக்கும்பட்சத்தில் அவர்களை தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் அனைவரையும் ‘கரோனா’ நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தயார் நிலையில் வைத்திருக்கவும், அதற்கான பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுபோல், தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவில் காய்ச்சல், சளி உள்ளிட்ட ‘கரோனா’ அறிகுறியுடன் காணப்படும் சாதாரண சிகிச்சைகளை கூட நோயாளிகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறைகண்டிப்பான உத்தரவிட்டுள்ளது. அவர்களை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வருவாய் இழந்த தனியார் மருத்துவமனைகள்:
கார்பரேட் தனியார் மருத்துவமனைகள், மற்ற தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் கோடிக்கணக்கில் வங்கி கடன் பெற்று கட்டிடங்கள் கட்டி, மருத்துவ உபகரணங்கள் வாங்கி நடத்தப்படுகிறது. இந்த மருத்துவமனைகளில்
தினமும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் சிகிச்சைப் பெறுவார்கள். ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் ரூ.2 லட்சம் முதல் அதிகப்பட்சம் ரூ.15 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த வருவாயை கொண்டே மருத்துவமனை நடத்தப்படுகிறது.
ஆனால், தற்போது உள்நோயாளிகள் அனுமதிக்கப்படாததால் தனியார் மருத்துவமனைகளின் ஒட்டுமொத்த வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் வருகை குறைந்ததால் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கு பெரியளவுக்கு மருத்துவப்பணிக்கான வாய்ப்பு இல்லை.
அவர்களுக்கான ஊதியம், வங்கிக்கடன் போன்றவற்றால் கார்ப்பரேட் மருத்துவமனைகளை தவிர மற்ற தனியார் மருத்துமனைகள் நிர்வாகம் ஸ்தம்பிக்க தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் ‘கார்ப்பரேட்’ மருத்துவமனைகள் நிலைமையும் மோசமாக வாய்ப்புள்ளது.