

அதிக அளவில் வேலைவாய்ப்பு களை வழங்கும் ஜவுளித் துறை தற்போது வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கி, இத்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந் நிலையில், நெருக்கடியிலிருந்து மீள மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுத வேண்டும் என ஜவுளித் துறையினர் எதிர் பார்த்துள்ளனர்.
தமிழகத்தில் அதிக வேலை வாய்ப்பை வழங்கும் துறையாகத் திகழ்கிறது ஜவுளித் துறை. மேற்கு மண்டல மாவட்டங்களில் இருந்து மட்டும் ஓராண்டுக்கு சுமார் ரூ.40,000 கோடி அளவுக்கு ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எனினும், 100 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியம் கொண்ட தமிழக ஜவுளித் துறை, கடந்த சில வருடங்களாக பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, ஜவுளித் துறையை வரலாறு காணாத நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.
இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில் சம்மேளனத் தலைவர் த.ராஜ்குமார் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது: இரண்டாவது உலகப்போர் ஏற்படுத்திய பாதிப்புகளைக் காட்டிலும் தற்போது மிகப் பெரிய பாதிப்பை ஜவுளித் துறை சந்தித்து வருகிறது. இந்திய ஜவுளி ஏற்றுமதியை நம்பியிருக்கும் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் நிலைகுலைந்துபோயுள்ளன. இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதி முடங்கிவிட்டது. அதேபோல, உள்நாட்டு விற்பனையும் நூறு சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆடை உற்பத்தி மையங்களான இச்சல்கரஞ்சி, மாலேகான், பில்வாரா, பிவாண்டி, சூரத் மற்றும் தமிழகப் பகுதிகள் முடங்கிவிட்டன. இதனால், ஜவுளி உற்பத்தியும் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.
பொதுவாக ஒரு பிரச்சினை ஏற்பட்டால், அது எத்தனை நாட்களில் சரியாகிவிடும் என்று தெரிந்துவிடும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும் என்றே தெரியவில்லை. சர்வதேச அளவில் இயல்புநிலை திரும்பிய பின்னர், மீண்டும் ஜவுளித் துறை புத்துயிர்பெற பல மாதங்களாகும். ஏறத்தாழ புதிதாக தொழில் தொடங்குவதைப்போன்ற நிலையை தொழில்முனைவோர் சந்திக்க வேண்டியிருக்கும். இது மிகப் பெரிய பொருளாதார இழப்பை மட்டுமின்றி, ஜவுளி மற்றும் அதைச் சேர்ந்த தொழில்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது.
எனவே, மத்திய, மாநில அரசுகளின் கருணைப் பார்வையே இத்தொழிலை நெருக்கடியிலிருந்து மீட்கும். கடன்கள் மறுசீராய்வு, வட்டி விகிதம் குறைப்பு, திருப்பிச் செலுத்த காலஅவகாசம், மத்திய அரசு வழங்க வேண்டிய தொகைகளை உடனடியாக வழங்குதல், ஜிஎஸ்டி-யை செலுத்த காலஅவ காசம், மின் கட்டணச் சலுகை, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மிக அவசியமாகும். இது தொடர்பாக, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.