

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வைரஸ் பாதிப்பு கண்டறியும் பரிசோதனை மையமாக செயல்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் பணியாற்றி சொந்த ஊருக்குத் திரும்பிய நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என 10 பேர் சளி, காய்ச்சல் பாதிப்புடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளி லிருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு திரும்பிய 905 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க மருத்துவக் குழுவினர் வழங்கிய அறிவுரையை மீறி சிலர் வெளியில் நடமாடுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து 5 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.