Published : 27 Mar 2020 06:51 am

Updated : 27 Mar 2020 06:51 am

 

Published : 27 Mar 2020 06:51 AM
Last Updated : 27 Mar 2020 06:51 AM

கரோனாவுக்கு ‘குளுமை கும்பிடு’ பூஜை செய்த கிராம மக்கள்!

kulumai-kumbidu-pooja-for-covid-19

கொள்ளை நோய்களும், தொற்று நோய்களும் தீவிரம் காட்டும் நேரத்தில் சில கிராமங்களில் சடங்குகளும், வழிபாடுகளும் நடத்தப்படுவது வழக்கம். அத்தகைய வழிபாட்டு முறைகளில் ஒன்றான குளுமை கும்பிடும் நிகழ்ச்சி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குரும்பபட்டியில் நேற்று முன்தினம் நடுஇரவில் நடந்துள்ளது.

75 வயது மதிக்கத்தக்க இருளாயி என்ற அமராவதி பாட்டி, அந்தச் சடங்கு பற்றிய விவரங்களைக் கோர்வையாகச் சொன்னார்.


“குளுமைங்கிறது மந்தையம்மனுக்குக் கும்பிடுறது. பொதுவா ஒட்டுவாரொட்டி (தொற்று) நோயும், சாவு பயமும் வந்தாத்தான் குளுமை கொண்டாடுவோம். இந்தவாட்டி ஊர்ல ஒரு சாவும் விழல. நாங்க எங்க பாட்லதான் இருந்தோம். டிவிகாரங்களும், நீங்களும் செய்தி போட்டு, எங்களுக்கு சாவு பயத்தைக் காட்டி, மந்தையம்மாளுக்கு குளுமை கும்பிட வெச்சிட்டீங்க” என்றார் அமராவதி பாட்டி.

“சரி பாட்டி, எப்படி கும்பிட்டீங்க?...” “செவ்வாக்கிழமை அன்னைக்கு திடீர்னு ஊரைச் சாட்டிவிட்டாங்க (நேரம் குறித்தல்). நடுராத்திரி 12 மணிக்கு, ஊரை மறிச்சு கரிக்கட்டையால கோடு கிழிச்சாரு பூசாரி. ஊரே கோட்டுக்கு இங்கிட்டு நின்னுது. அதாவது, ஆம்பளைபொம்பளை நண்டு நசுக்குன்னு பூராப்பேரும் இங்கிட்டு நின்னாக. தீமைகளை கொண்டுட்டு வர்ற துர் ஆவிகள் எல்லாம் கோட்டுக்கு அங்கிட்டு நிக்குமாம். அது மனுஷக்கறி திங்கணும்னு வருமாம். பிள்ளைக்கறி திங்க வர்ற நாய்க்கு (தீய சக்தியைச் சொல்கிறார்), நாங்க வெறும் குச்சிக் கருவாட்டை வெச்சிருந்தோம். உடனே, அது ச்சே... பிச்சைக்காரப் பயல்க... இவிய்ங்களப் போய் நாம அடிக்க வந்தோம் பாருன்னு வெட்கப்பட்டு திரும்பிப் போயிடுமாம். எங்க அய்யா, ஆயா எல்லாம் அப்படித்தான் சொல்வாக.

இன்னொரு பக்கம், வீட்டுக்கு வீடு கரகம் வெச்சி, துள்ளுமா இடிச்சி, முட்டை, முருங்கக்கா, குச்சிக்கருவாடு போட்டுக் குழம்பு வெச்சி பானகம் கரைச்சி சாமி கும்பிடுவாக. மாரியாத்தாவுக்கு பானகம் கரைச்சு வெச்சி, கரகம் ஜோடிச்சி, முட்டை முருங்கக்கா குச்சிக்கருவாடு போட்டு சோறாக்கி துள்ளுமா இடிச்சி சாமி கும்பிட்டு வீட்டு வீடு குளுமை கும்பிடுவாக. அப்புறம் மஞ்ச நூல்ல காதோல, கருகமணி கட்டி கரகத்தைக் கொண்டுபோய் கிணத்துல போட்டுட்டு, அந்த மஞ்ச நூலை மட்டும் கழுத்துல கட்டிக்குவாக. சமைச்ச கருவாட்டுக் குழம்புல கொஞ்சத்தை அதுக்குப் போட்டுட்டு மிச்சத்தை நாங்களே சாப்பிடுவோம். அதோட அந்தச் சனியன் ஊரைவிட்டுப் ஓடிப்போயிடும்” என்றார் பாட்டி.

இந்தச் சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்து அந்த ஊரைச்சேர்ந்த எழுத்தாளரும், பெரியாரியவாதியுமான இரா.முத்துநாகுவிடம் கேட்டோம்.

"வைத்தியத்தில் ஒண்ணும் ஆகலைங்கிறபோது, அச்சத்தில் இருக்கிற மக்களைத் திடப்பட்டுத்துவதுதான் இதுபோன்ற சடங்குகளின் நோக்கம்.மன்னராட்சிக் காலத்தில் இந்த மாதிரியான பெருநோய்கள், வைத்தியர்களுக்குக் கட்டுப்படாத நோய்கள் வரும்போது, ‘அரசால் நோயைக் கட்டுப்படுத்த முடியல, மக்களை காப்பாத்த, முடியல’ங்கிற அவப்பெயர் வரும். இந்த மாதிரியான அவச்சொல்லில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கு அரசே இதுமாதிரியான சடங்கு, சம்பிரதாயங்களை நடத்துவதற்கு உதவி செய்யும்.

ரெண்டாவது, அன்றைய வைத்தியம், ஆன்மிகம் சார்ந்துதான் இருந்திருக்கிறது. இப்போதும்கூட நோய்க்கும் பாரு பேய்க்கும் பாரு என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. இந்தச் சடங்கு சாமி வழிபாடல்ல. பேய் வழிபாடுதான். ஏனென்றால், இந்தச் சடங்கு அல்லது வழிபாட்டில், எல்லாமே எகனைக்கு மொகனையாக நடக்கும். வழக்கமாக நல்ல நிகழ்ச்சிகளுக்கு சுண்ணாம்பு அல்லது செம்மண் காவியால் கோடு கிழிப்பது மரபு. இந்த நிகழ்ச்சியின்போது கரிக்கோடு கிழிக்கிறார்கள்.

மாடுகளை வழக்கமாக மூக்கணாங்கயிற்றால்தான் கட்டுவார்கள். இந்தச் சடங்கில் மட்டும் கொம்புக்கயிற்றில் தும்பைப் போட்டு வண்டியின் மூக்காணியில கட்டி விட்டார்கள். அதாவது, எல்லாமே ஏறுக்கு மாறாக நடக்கிறது என்ற அர்த்தம். வரக்கூடிய துர்தேவதை இதை எல்லாம் பார்த்து, ‘இதென்னடா அலங்கோலம். ஏற்கெனவே இந்த ஊரு ரொம்ப மோசமா கிடக்கு. இதுல நாம வேற விளையாடணுமா?’ன்னு இரக்கப்பட்டுப் போயிடுமாம். சுருக்கமாகச் சொன்னால், தீயசக்தியிடம்... அதாவது கரோனாவிடம் மக்கள் சரணடைந்துவிட்டார்கள். ‘நாங்களே திவாலாகிக் கிடக்குறோம் எங்கள விட்டுருப்பா’ என்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டார்கள் என்பதன் அடையாளம்தான் இந்தச் சடங்கு” என்றார்.

இதுபற்றி பண்பாட்டு ஆய்வாளரும், ‘மந்திரமும் சடங்குகளும்’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியத்திடம் கேட்டோம்.

“பொதுவாக அம்மன்களை மையமாக வைத்து நடைபெறும் சடங்குகள் செவ்வாய்க்கிழமைதான் நடைபெறும். காரணம், செவ்வாய்க்கிழமைதான் அம்மன்களுக்குப் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது. மழை மற்றும் கிராமத்தின் செழிப்புக்காக முளைப்பாரி, ஆடிப்பொம்மை, மதுக்கொடை போன்றவை நடத்தப்படுவதைப் போலவே, நோய்களைக் குணப்படுத்துவதற்கு நம் மக்கள் சில மந்திர சிகிச்சை முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

நீங்கள் சொல்கிற சடங்கு பற்றி நான் அதிகம் அறியவில்லை. ஆனால், பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் தோன்றும்போது இடைவிடாது கோயில் மணிகளை ஒலிக்கச் செய்வது சில இனத்தவர்களின் பழக்கமாக இருந்துள்ளது. இதுபற்றி ஆய்வு செய்த கார்போவ் என்ற சோவியத் ஆய்வாளர், ‘உலோகமணியில் இருந்து எழும் கேளா ஒலியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நோய் பரப்பும் எலிகள் கிராமத்தைவிட்டே ஓடிவிட வாய்ப்புள்ளது’ என்று எழுதியிருக்கிறார். அதற்காக எல்லா சடங்குகளிலும், அறிவியல் உண்மை இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. போலியான சடங்குகளும், சிகிச்சைகளும் சமுதாயத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என்றார்.

கிராமத்து இளைஞர்களிடம் பேசியபோது, “நடுவுல கரிக்கோடு கிழிச்சி, ‘இந்தக் கோட்ட நீயும் தாண்டக்கூடாது, நானும் தாண்ட மாட்டேன்’னு கரோனா கூட பேச்சுவார்த்தை நடத்துனாரு பூசாரி. சடங்கு பலனளிக்குமோ இல்லியோ. அது தெரியாது. ஆனால், கருவாடு ருசியா இருந்துச்சி அண்ணே” என்றார்கள் சிரித்தபடி.


Covid 19‘குளுமை கும்பிடு’ பூஜைகொள்ளை நோய்தொற்று நோய்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author