Published : 26 Mar 2020 10:01 PM
Last Updated : 26 Mar 2020 10:01 PM

ஊரடங்கை மீறியதால் 283 வழக்குகள் பதிவு, 670 வாகனங்கள் பறிமுதல்: சென்னை போலீஸார் நடவடிக்கை

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மதித்து சமூக விலகலை மதிக்காமல் எனக்கென்ன என்று தேவையின்றி திரிந்ததாக சென்னை முழுதும் 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, 670 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சமுதாய பரவல் வந்துவிடாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. 21 நாள் சமூக தனிமை என்பதை கடைபிடிக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் வழக்கம்போல் சில அரசின் உத்தரவை அலட்சியம் செய்து வீதிகளில் சாலைகளில் வாகனங்களில் சுற்றுவதால் போலீஸார் கடும் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருந்தனர். நேற்று தமிழகம் முழுதும் 1200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் அலட்சியமாக உலா வந்த பலர்மீது தமிழகம் முழுதும் போலீஸார் பலவேறு வழக்குகளை பதிவு செய்தனர்.

சென்னையிலும் நேற்று காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்தும் மீறி நடந்ததாக 670 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை போலீஸார் வெளியிட்டுள்ள தகவல்:

“கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் சிஆர்பிசிபிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144 சிஆர்பிசியி-ன் கீழ் தடையை மீறுபவர்களை கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டும், சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்தும் வருகின்றனர்.

மேற்படி 144 சிஆர்பிசி-யைநிறைவேற்றும் விதத்தில், சென்னையில் 156 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதன்பேரில், சென்னை பெருநகரில் இன்று (26.03.2020) காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறிய குற்றத்திற்காக 3 வழக்குகளும், வதந்தி பரப்புவோர் மீது 1 வழக்கும் என மொத்தம் 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 119 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இலகு ரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து காவல் துறையினர், குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 4 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக 49 வழக்குகளும் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 547 வழக்குகளும் என மொத்தம் 1,400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 10 இலகு ரக வாகனங்கள், 580 இருசக்கர வாகனங்கள், 73 ஆட்டோக்கள் மற்றும் 7 இதர வாகனங்கள் என மொத்தம் 670 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது”.

இவ்வாறு சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x