தனக்கு மருத்துவம் கிடைத்த கிராமத்தை விட்டு பிரியாத காட்டு யானை

தனக்கு மருத்துவம் கிடைத்த கிராமத்தை விட்டு பிரியாத காட்டு யானை
Updated on
1 min read

22 வயது ஆண் யானை ஒன்று தனக்கு மருத்துவ சிகிச்சை அளித்த கிராமத்தை பிரிய மனமின்றி கிராமத்திலேயே தங்கிவிட்டது.

சுமார் ஓராண்டுக்கு முன்னதாக, நீலகிரி மாவட்டம் வடக்கு வனப்பகுதியில் உள்ள சிகூரில் இந்த காட்டு யானையை கிராமத்தினர் அதன் நீண்ட தந்தங்களுடன் கண்டனர். அப்போது அதன் தும்பிக்கையில் பயங்கரமான காயம் இருந்தது. காயம் காரணமாக யானை உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் அவதியுற்று வந்தது.

அப்போது சிகூரில் தனியார் உல்லாச விடுதி நடத்தி வந்த மார்க் என்பவர், யானைக்கு உணவு வழங்கி, அதற்கு ரிவால்டோ என்ற பெயரையும் சூட்டினார். மார்க் இறக்கும் வரை அந்த இடத்துக்கு இந்த யானை வந்து சென்றுள்ளது.

ஆனால் மார்க் இறந்த பிறகும் தொடர்ந்து இந்த இடம் தேடி அந்த காட்டு யானை வரத் தொடங்கியது, ஆனால் உணவளிக்க ஆளில்லை. இதனால் யானையின் காயம் மேலும் அதிகரித்தது.

வனவிலங்கு ஆர்வலர்கள், வன அதிகாரிகளிடம் யானைக்கு ஏதாவது உதவிபுரியுமாறு வலியுறுத்தினர். இதனையடுத்து வன அதிகாரி பந்தன் என்பவர் யானைக்கு வைக்கோலுடன் மருந்துகளை வைத்து யானைக்கு அளித்து வந்தார். இதனையடுத்து காயம் மெதுவே மறையத் தொடங்கியது.

இப்போது வன ஊழியர் பந்தன் செல்லுமிடத்துக்கெல்லம் அவருடன் இந்த யானையும் செல்வது சகஜமான காட்சியாகியுள்ளது. பந்தன் அழைத்தால் போதும் வன எல்லைக்கு ‘ரிவால்டோ’ வந்து விடும்.

தற்போது இங்கு சுற்றுலா வருவோரின் பெரிய கவர்ச்சியாக இந்த ரிவால்டோ என்ற யானை இருந்து வருகிறது. பலர் செல்ஃபிக்களையும் ரிவால்டோவுடன் எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனாலும் இது என்ன இருந்தாலும் காட்டு யானை என்பதால் அதன் அபாயம் கருதி அதனை கண்காணிக்க வன இலாகா தனியாக ஊழியர் ஒருவரை நியமித்துள்ளது.

ரிவால்டோ குறித்து வனத்துறை அதிகாரி சி.பத்ரசாமி கூறும்போது, “ரிவால்டோ நட்புறவுக்கான யானைதான், ஆனாலும் காட்டு யானை என்பதால் அதன் நடத்தை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். மனித மற்றும் வாகன சப்தங்கள் அதனை தொந்தரவுக்குள்ளாக்கும். எனவே சுற்றுலாப் பயணிகள் ஒரு பாதுகாப்பான தொலைவில் இருந்து யானையை பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in