Published : 26 Mar 2020 09:00 PM
Last Updated : 26 Mar 2020 09:00 PM

மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா பரவாமலிருக்க அரசு நடவடிக்கை: சுழற்சி முறையில் மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டு | படம்: சிறப்பு ஏற்பாடு.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டுகளில் சுழற்சி முறையில் பணியாற்றும்வகையில் மருத்துவக் குழுக்களை ஏற்பாடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தனிமை வார்டுகளில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்று பரவாமல் பாதுகாக்கப்பட இந்த முறை அவசியம் என சுகாதார குடும்ப நலத்துறையின் அவசரகால செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊடுருவியுள்ள கரோனா வைரஸால் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 42 பேர் முற்றிலும் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 27 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தனிமை வார்டுகளில் சிகிச்சை பெறுபவர்களைக் கவனிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் தொற்று ஏற்படும் என்பதால் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு சுழற்சி முறையில் அவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோயிலிருந்து (கோவிட் 19) சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்கும் முயற்சியில், அனைத்து டீன்களும், அரசு மருத்துவ நிறுவனங்களின் தலைவர்களும் நான்கு முதல் ஏழு நாட்கள் வரை உள்ள காலத்திற்கு சுழற்சி முறையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் பணியாற்ற மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் குழுவை அடையாளம் காணுமாறு மருத்துவ துறை உயரதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையைச் சேர்ந்த மாநில அவசரகால செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் டீன் மற்றும் சுகாதார சேவைகளின் இணை இயக்குநர்களுக்கு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

,கோவிட் -19 அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் மருத்துவ நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்டு அரசாங்கத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனங்களில் உள்ள மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், மேலும் பரவும் அபாயம் உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களை நியமிக்கும் போது சில வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு நிறுவனத் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில், மருத்துவர்கள் குழு, ஊழியர்கள் செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் குழுவாக நான்கு முதல் ஏழு நாட்கள் வரை சுழற்சியில் வேலை செய்ய முன்னுரிமை அளிப்பவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.

தங்கள் வீடுகளுக்கும் சமூகத்திற்கும் தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதால் ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எனவே, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் குறிப்பிட்ட மருத்துவக் குழுக்கள் பணியாற்றும் காலகட்டத்தில் அவர்களுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே வசிக்கும்வகையில் விடுதி / குவார்ட்டர்ஸ் (குடியிருப்பு) தங்குமிடம் வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தங்கியிருக்கும் இடங்களில் கடுமையான கிருமிநாசினி நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அவர்களின் முறை முடிந்ததும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட புதிய குழு அந்த இடங்களில் நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையைச் சேர்ந்த மாநில அவசரகால செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x