Published : 26 Mar 2020 07:57 PM
Last Updated : 26 Mar 2020 07:57 PM

ஏழ்மையிலும் ஏழ்மையான மக்களைப் பாதுகாக்கும் உங்கள் செயல் பாராட்டத்தக்கது: மத்திய அரசுக்கு கமல் நன்றி

ஏழ்மையிலும் ஏழ்மையான மக்கள் என்ன நிலைக்கு ஆளாவார்களோ என்று யோசித்ததால் நான் சற்று உணர்ச்சிவசப்பட்டு பகிரங்கமாக உங்களுக்குக் கடிதம் எழுதினேன். தற்போதைய உங்கள் நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது என பிரதமருக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் ஒன்றுகூடுதலைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் கடுமையாகிவரும் சூழலில் இரண்டு நாட்களுக்கு முன் பேசிய பிரதமர் 21 நாட்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும், சமூக விலகலைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது பேச்சில் சாதாரண மக்கள் வாழ்வாதாரம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை என ப.சிதம்பரம் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் சற்று கடுமையாகவே தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், “உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்கச் சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.
பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்” எனக் கோபமாகக் குறிப்பிட்டிருந்தார்

இதன் பின்னர் ப.சிதம்பரம், ராகுல் காந்தி உள்ளிட்டோர் சாதாரண மக்கள் வாழ்வாதாரத்துக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை ஒதுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் இன்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடித்தட்டு மக்களுக்காக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இதை கமல் வெகுவாக வரவேற்றுப் பாராட்டியுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“ஏழ்மையிலும் ஏழ்மையான மக்களைச் சென்றடைந்துள்ளீர்கள். அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்ற எனது அச்சம் எனது வெடிப்புக்கு வழிவகுத்த ஆதங்கத்தால் பிரதமருக்கு பகிரங்கக் கடிதம் எழுத நேர்ந்தது.
இந்த நெருக்கடியின்போது அவர்களுக்கு ஆதரவளிக்கும் உங்களது இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது”.

— Kamal Haasan (@ikamalhaasan) March 26, 2020


இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x