

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. இந்தத் தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 42 பேர் முற்றிலும் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், கை குலுக்கக் கூடாது, கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும், 15 நாட்கள் சமுதாயத் தனிமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் வைக்கப்பட்டது.
3-ம் நிலையான சமுதாயப் பரவல் நிலை இந்தியாவுக்குள் வந்துவிடக்கூடாது என மருத்துவர்கள், அரசாங்கங்கள் போராடுகின்றனர். பிரதமர் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆக உள்ளது.
இந்நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததால் எண்ணிக்கை 27 ஆனது.
இதுகுறித்து விஜயபாஸ்கரின் ட்விட்டர் பதிவு:
“தற்போதைய தகவல், தமிழ்நாட்டில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 24 வயதான அந்த இளைஞர் திருச்சியில் வசிக்கிறார். சமீபத்தில் துபாயிலிருந்து தமிழகம் திரும்பியுள்ளார். அவர் தற்போது திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக உள்ளார்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை கரோனா தோற்று கண்டறியப்பட்ட 26 பேரில் 23 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். மூன்று பேர் உள்ளூர்க்காரர்கள்.
நேற்று முன் தினம் அதிகாலையில் மதுரை நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் தமிழகத்தில் முதல் கரோனா உயிரிழப்பு ஏற்பட்டது. தற்போது 26 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் சிகிச்சை முடிந்து சென்றுவிட்டனர்.