

கோவையில் வாகன ஓட்டிகள் மீது தாக்குதல் நடத்திய சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்டித்துள்ளார்.
கோவை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம், சிறப்பு உதவி ஆய்வாளர் துரை ஆகியோர் நேற்று (மார்ச் 25) தடாகம் சாலை இடையர்பாளையம் சந்திப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்த 2 பேரை, சிறப்பு உதவி ஆய்வாளர் துரை சரமாரியாகத் தாக்கினார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ நேற்று வாட்ஸ் அப்பில் வெளிவந்து பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவத்தை அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், வாகன ஓட்டுநர்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும், இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது எனக் கூறி சம்பந்தப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் துரையைக் கண்டித்துள்ளார்.
"வாகன ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. விசாரித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் துறையினருக்கு, காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அறிவுறுத்தியுள்ளார்" என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.