

கரோனா வைரஸ் பரவல் தொடர்பான செய்திகள், நாளுக்கு நாள் நம்மை நடுங்கவைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மனிதாபிமானத்தைப் பறைசாற்றும் வகையிலான நிகழ்வுகளும் ஒருபக்கம் நடந்துகொண்டே இருக்கின்றன. அண்டை மாநிலமான கேரளத்தில், மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் வகையிலான சேவைகளைச் செய்தவர்கள், பிறர் மீதான அக்கறையின் பேரில் தங்களைத் தாங்களே முடக்கிக் கொண்டவர்கள் என்று பலரும் இப்பட்டியலில் இடம் பிடிக்கிறார்கள்.
இந்திய அளவில், வெளிநாடுகளில் பணிபுரிவோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் கேரளம். சுமார் 25 லட்சம் பேர் இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவதாகக் கேரள அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவகையில், கரோனாவின் தாக்கம் கேரளத்தில் வீரியம் பெறுவதற்கு, இந்த எண்ணிக்கையும் ஒரு காரணமாகிவிட்டது.
இந்நிலையில், தங்கள் உயிரையே பணயம் வைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் மன உறுதியுடன் மருத்துவச் சேவையாற்றி வருகின்றனர். மருத்துவப் பணியாளர்களைத் தாண்டி பிற துறைகளைச் சேர்ந்தவர்களும், துயரமான இந்தத் தருணத்தில் தோள் கொடுக்கின்றனர்.
சடங்குக்கு உதவிய காவலர்கள்
கேரளத்தின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் ராமசுவாமி, துபாயில் வங்கி ஊழியராகப் பணிபுரிகிறார். கோழிக்கோட்டில் வசித்து வந்த இவரது தாய் கீதா நாராயணன், உடல்நலமின்மையால் சமீபத்தில் காலமானார். தகவல் வந்ததுமே குடும்பத்தோடு துபாயிலிருந்து கிளம்பி வந்தார் ஆனந்த். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என கேரள அரசின் சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கும் நிலையில், நெருங்கிய உறவுகள் மூலம், மிக எளிமையாக தன் தாயாரை அடக்கம் செய்தார் ஆனந்த். தாயாரின் 16-வது நாளுக்கு உரிய சடங்கினை செய்ய நினைத்த அவர், அதைச் செய்ய முடியாமல் தவித்தார்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாத நிலை. இயல்பாகவே கேரளத்தில் இருக்கும் விழிப்புணர்வால், ஆனந்தின் நண்பர்களும்கூட உதவிக்கு வர முடியாமல் தவிர்க்க வேண்டியதாயிற்று. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் கடைகளுக்கு போன் செய்து சடங்குக்கான பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவரச் சொல்லி கேட்டுக்கொண்டார் ஆனந்த் ராமசுவாமி. ஆனால், ‘ஃபாரின் ரிட்டர்ன்’ என்பதால் கரோனாவுக்குப் பயந்து கடைக்காரர்களும் பின்வாங்கிக்கொண்டார்கள்.
இந்தச் சூழலில், வெளிநாட்டிலிருந்து வந்தோரின் தனிமைப்படுத்துதலைக் கண்காணிக்கும் போலீஸாருக்கு ஆனந்தின் சிரமம் தெரியவந்தது. இதையடுத்து, நிராஸ், உமேஸ் எனும் இரு காவலர்கள், சடங்குக்குத் தேவையான தென்னம்பூ, ஓலை உள்ளிட்ட பொருட்களுடன் ஆனந்தின் வீட்டில் போய் நின்றனர். கரோனா அச்சம் காரணமாக, வீட்டு முற்றத்தில் அவற்றை வைத்துவிட்டுத் திரும்பிச் சென்ற காவலர்களை, கண்களில் நீர்த் திரையிடப் பார்த்துக்கொண்டிருந்தார் ஆனந்த்.
தந்தையைப் பார்க்க முடியாத தவிப்பு
கேரளத்தின் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த லினோ ஆபேல், கத்தார் நாட்டில் வேலைசெய்து வந்தார். அவரது தந்தை ஆபேல் ஜோசப் கட்டிலிலிருந்து தவறி விழுந்ததில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். தகவலறிந்த ஆபேல், கத்தாரிலிருந்து கொச்சின் வழியாகக் கோட்டயம் வந்தார். தனக்கு லேசான இருமல் இருந்ததை உணர்ந்த லினோ, தனக்குக் கரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகித்தார். தன்னால் மற்றவர்களுக்குக் கரோனா பரவிவிடக் கூடாது எனும் அச்சம் காரணமாக கோட்டயம் சுகாதாரத் துறைக்குத் தகவல் சொன்னார்.
அவரது தந்தை அவசர சிகிச்சையில் இருந்த அதே கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டார் லினோ. அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்ட அன்றே, லினோவின் தந்தை இறந்துபோனார். தந்தையின் முகத்தை இறுதியாகப் பார்த்துவிடத் துடித்தார் லினோ. ஆனால், தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால் அதற்கான வாய்ப்பு இல்லை என சுகாதாரத் துறையினர் சொல்ல, உடைந்துபோனார். தன் தந்தையின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட ஆம்புலன்ஸை ஜன்னல் வழியே பார்த்துக் கண்ணீர் விட்டார்.
இரு தினங்களில் அவருக்குக் கரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட, “எனக்குக் கரோனா தொற்று இருந்திருந்தாலும் இத்தனை வருந்தியிருக்க மாட்டேன். தொட்டுவிடும் தூரத்தில் என் தந்தையின் உடல் இருந்தும், அருகில் சென்று பார்க்க முடியாமல் தவித்து நின்றேன். என் நிலை யாருக்கும் வரக் கூடாது” என்று கண்ணீர் விட்டுக் கதறினார் லினோ.
கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்த அன்று, தனது தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த மட்டுமே அந்த மகனால் முடிந்தது. “வெளிநாட்டிலிருந்து வந்தோர் எந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதற்கு லினோ முன்னுதாரணமாகி இருக்கிறார்” எனப் புகழாரம் சூட்டியிருக்கிறார் கேரள முதல்வர் பினராய் விஜயன்.
தனிமைப்படுத்துதலின் வலி
தனிமைப்படுத்துதல் குறித்து அரசு விழிப்புணர்வு ஊட்டிக் கொண்டிருக்க, அதன் துயர்மிகு வலியைப் பதவி செய்துள்ளார் திருச்சூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் அதிரா எல்சா ஜான்சன். சமூக வலைதளத்தில் அவர் எழுதியிருக்கும் பதிவு, இப்போது கேரளத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிறது. மருந்துகளுக்குக் கட்டுப்படாத அளவுக்குக் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிரா, கடந்த இரு ஆண்டுகளாகவே தனிமைப்படுத்தப்பட்டே வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், “நான் இப்போதெல்லாம் மருத்துவமனை, மருந்தின் பக்கவிளைவுகள் குறித்து தெரிந்துகொள்ளத்தான் வெளியே வருகிறேன். ஆனால், மருத்துவமனை, அரசு உட்பட பலராலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறேன். இப்போது ஒரு கொடிய வைரஸ் பரவி வருவதால் நான் தனிமையில் இருக்க வேண்டும். இன்றைக்கு ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்றெல்லாம் பலரும் சலித்துக்கொள்கிறார்கள். ஆனால், இங்கே பலதரப்பட்ட நோயாளிகள் பல ஆண்டுகளாகத் தனிமையில்தான் இருக்கிறார்கள்.
காசநோய் மையத்தில் வலியோடும், வேதனையோடும் தனிமையில் இருக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பற்றியெல்லாம் பொதுச் சமூகம் பேசியிருக்கிறதா? நான் அதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இந்தக் கரோனா குழப்பமெல்லாம் தீர்ந்த பின்பு, இத்தனைக் காலம் தனிமையில் இருப்பவர்கள் குறித்தும் கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள்” என இறைஞ்சும் அதிராவின் பதிவு, ஆயிரம் வலிகளைச் சொல்கிறது.
ஆம், கரோனா கொடிது. அது போதித்துக்கொண்டிருக்கும் பாடமோ மிகப் பெரிது!