Last Updated : 26 Mar, 2020 05:52 PM

 

Published : 26 Mar 2020 05:52 PM
Last Updated : 26 Mar 2020 05:52 PM

வொர்க் ஃப்ரம் ஃபார்ம்: மாற்றி யோசித்த தேனிக்காரர்

கொஞ்சம் மாற்றி யோசித்தால் நெருக்கடி நிலையிலும் நிறைய சாதிக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார் பெங்களூருவில் ஐடி நிறுவனம் நடத்தும் தேனி இளைஞர் அரவிந்த் ராஜ். ஆள் தேனிக்காரர் என்பது மட்டுமல்ல, இவரது சுபாவமே தேனீயைப் போன்றதுதான்.

படித்துவிட்டு 10 ஆண்டுகள் பல்வேறு ஐடி நிறுவனங்களில் பறந்து பறந்து வேலை பார்த்து, சிறுகச் சிறுக சேமித்தார். பிறகு தனது அமெரிக்க நண்பர் கேப்ரியலின் உதவியுடன் பெங்களூருவில் சொந்தமாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். 'இன்ஸ்டாகிளீன்' (InstaClean-Clean Your Inbox) என்ற ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் செயலியை உருவாக்கும் நிறுவனம் இது. இந்நிறுவனத்தின் பங்குதாரராகவும், சிஇஓ-வுமாக இருக்கிறார் இவர்.

நிறுவனம் வளர்ந்து வரும் நிலையில், இடியென இறங்கியது கரோனா. உலகப் பொருளாதாரத்தையே உருக்குலைத்திருக்கும் கரோனாவின் கருநிழல், இந்தச் சிறு நிறுவனத்தின் மீதும் விழுந்தது. ஆனால், சவால்களைச் சந்திக்கத் தயங்காத அரவிந்த், அடுத்து எடுத்த முடிவுதான் இவரைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது.

''கரோனா காரணமாகப் பல நிறுவனங்கள் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' என ஊழியர்களை அவரவர் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவித்தன. நாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக வொர்க் ஃப்ரம் ஃபார்ம் (Work From Farm) என்று ஊழியர்களைக் கேட்டுக்கொண்டோம். அதாவது, கிராமத்துப் பண்ணையில், முற்றிலும் இயற்கை சூழ்ந்த இடத்தில் இருந்து வேலை செய்ய யாரெல்லாம் தயார் என்று எங்கள் ஊழியர்களிடம் கேட்டோம். வீட்டில் நாலு சுவர்களைப் பார்த்துக்கொண்டு எவ்வளவு காலம் இருப்பது என்று நினைத்தார்களோ என்னவோ, பலர் ஆர்வத்துடன் இந்தத் திட்டத்துக்குச் சம்மதித்தார்கள்.

உடனே, தேனி மாவட்டத்தில் உள்ள எங்களது பாட்டியின் பண்ணை வீட்டை அலுவலகமாக மாற்றி, வேலை பார்க்க ஆரம்பித்தோம். எங்கள் நிறுவனம் ரொம்பச் சிறியது. மொத்தமே 20 பேர்தான். அதில் எட்டு பேர் இங்கே வந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இங்கே உற்சாகத்துடன் வேலை பார்ப்பதை அறிந்த மற்றவர்களும் இங்கே வருவதாகச் சொன்னார்கள். ஆனால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுவிட்டதால், அவர்களுக்கு அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை'' என்கிறார் அரவிந்த் ராஜ்.

தேனியிலிருந்து உத்தமபாளையம் வழியாக கம்பம் செல்லும் வழியில் இருக்கிறது அனுமந்தன்பட்டி. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமம் என்பதால், வழியெங்கும் பசுமை... நிறைய தென்னந்தோப்புக்கள், முருங்கைத் தோட்டங்கள், முந்திரி (பருப்பு) தோப்பு, காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்ட தோட்டங்களுக்கு நடுவே, மர நிழலில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இந்நிறுவன ஊழியர்கள்.

கிராமம் என்றாலும் சாலை வசதியும், இன்டெர்நெட் வசதியும் குறை சொல்ல முடியாதவாறு இருக்கிறது. இங்கு வேலை பார்த்துக்கொண்டிருக்கும் 8 பேருமே வேறு மாவட்டம், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வித்தியாசமான சூழலை ரொம்பவே ரசிக்கிறார்கள். அத்தனை பேருமே முப்பதைக் கடந்தவர்கள்தான் என்றாலும், வேலைக்கு இடையில் கோடை விடுமுறையில் பாட்டி வீட்டுக்குப் போன பிள்ளைகள் போல உற்சாகமாக வலம் வருகிறார்கள்.

"நான் பெங்களூருவில் பிறந்து, நைஜீரியாவில் வளர்ந்தவள். இப்போது இந்நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். ஆபீஸில் கம்ப்யூட்டர், வீட்டில் லேப்டாப், பொழுதுபோக்குவதற்கு செல்போன் என்று செயற்கை வெளிச்சத்தையே உற்றுப் பார்த்து வேலை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, பண்ணையில் இயற்கை வெளிச்சத்தில் வேலை பார்ப்பதே அலாதியாக இருக்கிறது. ஏசியும், சுழல் நாற்காலியும் இல்லாதது ஒரு குறைதான். ஆனால், வீட்டு பால்கனியில் கால்நீட்டி ஹாயாக இருப்பதுபோல, இங்கே பெட்ஷீட்டை விரித்துக்கொண்டு கால் நீட்டி படுத்தபடி வசதியாக வேலை பார்க்கிறோம்.

பீட்ஸா, பர்கர் என்று ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டது. இங்கே கேட்ட நேரத்தில் இளநீரும், மோரும் ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கின்றன. வழக்கமாகக் கொஞ்ச நேரம் வேலை பார்த்தாலும், 24 மணிநேரமும் வேலை பார்த்ததுபோல மூளை டயர்டாகிவிடும். இங்கேயோ 7 மணி நேரம் மட்டுமே வேலை, மீதி 8 மணி நேரம் தூக்கம், 9 மணி நேரம் பொழுதுபோக்கு என்று பிரித்திருப்பதால் ரொம்ப ஜாலியாக இருக்கிறது.

பக்கத்தில் உள்ள மலைகளில் ஏறுவது, கிணற்றிலும், கண்மாய்களிலும் நீந்துவது, தோட்டங்களில் எங்களுக்குத் தேவையான பப்பாளி, கொய்யா, முந்திரி போன்ற பழங்களை நாங்களே பறிப்பது என்று ஆனந்தமாக இருக்கிறோம். 7 மணி நேர வேலையை 5 மணி நேரத்திலேயே முடிக்கிற அளவுக்கு மூளையும், கைகளும் சுறுசுறுப்பாக வேலை பார்க்கின்றன. 'பேசாமல் நம் அலுவலகத்துக்கு இங்கேயே ஒரு கிளை போட்டுங்க சார்' என்று அரவிந்திடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்'' என்று புத்துணர்வுப் புன்னகையுடன் சொல்கிறார் ஆன்ட்ரியா.

மற்றொரு ஊழியரான பவித்ரன், படபடவென பேச ஆரம்பித்தார். ''எனக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டம். டிசம்பரில்தான் இந்த நிறுவனத்தில் சேர்ந்தேன். நிலைமை இன்னும் மோசமாகும் என்று அரவிந்த் சார் முன்கூட்டியே ஊகித்து, இந்தக் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார். முதலில் ஒரு வாரம்தான் இங்கிருந்து வேலை பார்ப்பது என்று முடிவெடுத்தோம். ரிட்டர்ன் டிக்கெட் எடுத்துவிட்டுத்தான் வந்தோம். ஆனால், இப்போதைக்கு பெங்களூருவுக்குத் திரும்பவே முடியாது என்கிற அளவுக்கு நிலைமை மோசமானது. எங்களுடன் பணிபுரிபவர்களில் இலங்கையைச் சேர்ந்த கனிஷ்கரும் ஒருவர்.

அவரும் தாய்நாடு திரும்ப முடியாத நிலை. இந்நிலையில், இதைவிடப் பாதுகாப்பான இடம் வேறில்லை என்று உணர்ந்தோம். எனவே டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு வேலை பார்க்கிறோம். ஊரை விட்டு ரொம்ப ஒதுக்குப்புறமான இடம் என்பதால் ஜாலியாக வேலை பார்க்கிறோம். அதேசமயம், அரசு தெரிவித்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனமாகப் பின்பற்றுகிறோம்" என்றார் பவித்ரன்.

மிகப்பெரிய இடர்ப்பாடுகள் வருகிறபோது, அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிகளையும் மனிதன் கண்டுபிடிக்கிறான். அதற்கு இன்னொரு உதாரணமாகி இருக்கிறார்கள் இன்ஸ்டாகிளீன் ஊழியர்கள். சபாஷ்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x