Published : 26 Mar 2020 05:24 PM
Last Updated : 26 Mar 2020 05:24 PM

ஏப்.14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; கடன், வட்டி வசூலுக்குத் தடை; ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கர்ப்பிணி, நாள்பட்ட நோய்த் தாக்குதல் நோயாளிகளுக்கு 2 மாத மருந்துகள், ஊரடங்கை அமல்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 9 சிறப்புக் குழுக்கள், கடன் , வட்டி வசூல் அனைத்துக்கும் தடை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:

''தமிழக அரசு கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இதற்கென பொதுமக்களின் நன்மை கருதி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன்படி ஊரடங்கு உத்தரவு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

இந்த உத்தரவுகளை அனைத்து மாவட்டங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்திட உத்தரவுகள் வழங்கப்பட்டன. அந்த உத்தரவுகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாநகர ஆணையர்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், பொது சுகாதாரத் துறையின் துணை இயக்குநர்கள் ஆகியோருடன் காணொலிக் காட்சி மூலம் கலந்தாய்வு முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (26.3.2020) நடத்தப்பட்டது.

கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பின்வரும் உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார்:

1. மார்ச் 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றது.

2. ஊரடங்கு உத்தரவினால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்கவும், மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் தடையின்றிக் கிடைக்கவும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் தலைமையில் இப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

3. பல கிராமங்களிலும், நகரங்களிலும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தினசரி / வாராந்திர / மாத வட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது, ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில், இதுபோன்ற பண வசூலை உடனடியாக, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகின்றனர்.

4. பெரிய காய்கறி மார்க்கெட் / சந்தை இருக்குமிடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், காய்கறி / பழ வகைகளை விற்கும் கடைகளை விசாலமான இடங்களில் அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும். அப்போது சமுதாய இடைவெளி விதிப்படி (Social distancing norms-) மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகைக் கடைகளிலும், மருந்துக் கடைகளிலும், காய்கறிக் கடைகளிலும் சமூக விலகல் (Social distancing norms-) முறையை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்.

காய்கறி மார்க்கெட், மளிகைக்கடைகள், உணவகங்கள் செயல்படுவதற்கான நேரக் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.

5. அதிக மக்கள் வாழும் குடிசை மாற்றுக் குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.

6. இந்த நோய்த் தொற்று மிக மிகக் கடுமையானது என்பதையும், இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பதையும், இது மனித சமுதாயத்திற்கு ஒரு பேரழிவை ஏற்படுத்தவல்லது என்பதையும், மக்கள் உணரும் வண்ணம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனையும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் ஒலிப்பெருக்கி / தண்டோரா மூலம் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மேலும், துண்டுப் பிரசுரம் மூலம் வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

7. கர்ப்பிணிப் பெண்கள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காச நோய், எச்ஐவி (HIV) தொற்று உள்ளோர், போன்றவர்கள் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் பெறுகின்றனர். அவர்களுக்கு இரு மாதங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.

8. அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்படும். இது தொடர்பான கோரிக்கைகள் இருப்பின், அவற்றிற்கான அத்தியாவசியச் சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்குவார்கள்.

* மருத்துவப் பொருட்களுக்கான சான்றிதழ்களை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ((TNMSC), அரசு மருத்துவமனை முதல்வர்கள் (Dean), மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குநர்கள் ((JDHS) மற்றும் பொது சுகாதாரத் துறையின் துணை இயக்குநர்கள் ((DDHS)ஆகியோர் வழங்குவர்.

* அத்தியாவசியப் பொருட்களை நகர்வு செய்யும் தனியார் வாகனங்களுக்கும், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியார் பணியாளர்களுக்கும், சென்னை உட்பட அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேர்முக உதவியாளர்கள் (PA-G) சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

* மின் வணிக நிறுவனங்களான (e-commerce)Grofers, Amazon, Big basket, Flipkart, Dunzo போன்ற நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்ல ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பொருட்களை மற்ற நிறுவனங்களும், அந்தந்தப் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளும், கூட்டுறவு விற்பனை அங்காடிகளும், வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்க அனுமதிக்கப்படுகின்றது.

* ஜோமேட்டோ, ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம், விநியோகம் செய்யப்படும் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கான தடை தொடரும். எனினும், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் தாங்களாகவே சமைக்க இயலாதோர் ஆகியோர் மெஸ் மற்றும் சிறு சமையலகங்கள் (caterers) மூலம் ஏற்கெனவே தங்கள் உணவுகளைப் பெற்று வருகின்றனர். இதற்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படுகின்றது.

இத்தகைய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகன ஓட்டுநர்கள், அடையாள அட்டை வைத்திருப்பதை சம்பந்தப்பட்ட வாகனங்களில் அத்தியாவசிய சேவைக்காக என்று வில்லைகள் ஒட்டியிருப்பதையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* அதேபோன்று, காய்கறி, பழங்கள், முட்டை போன்ற விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற நபர்களுக்கும் தேவையான அனுமதிச் சீட்டை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்.

* வேளாண்மைத் துறை விலக்களிக்கப்பட்ட அத்தியாவசியத் துறை என்பதால், விவசாயத் தொழிலாளர்கள், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றின் நகர்வு அனுமதிக்கப்படுகின்றது. அதேபோன்று, வேளாண் விளைபொருட்களை சந்தைக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

* கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடைத் தீவனம் ஆகியவற்றின் நகர்வுகளும் அனுமதிக்கப்படுகின்றது. இதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், காவல் துறை தலைமையக கட்டுப்பாட்டு அறையை கீழ்க்கண்ட எண்களில் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம்: 044-2844 7701, 044-2844 7703

9. முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கு அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் 108 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 108 ஆம்புலன்ஸ் சேவையுடன், இச்சேவையையும் இணைத்துச் செயல்பட வேண்டும்.

10. அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிவாரணம் முழுமையாக பயனாளிகளைச் சென்றடைவதையும், இவை வழங்கும்போது சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் முழுமையாக பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், அந்தந்த மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்றவாறு, தேவைப்படின் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை அவரவர் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்யலாம். நோய்த் தொற்றினை தடுக்கும் விதத்தில், கை ரேகை பதிவு செய்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை தற்போது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

11. வெளி நாட்டிலிருந்து வந்த சுமார் 54 ஆயிரம் பேர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை, அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் வெளியே வராதவாறு தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது.

12. கரோனா தொற்று உடையோருடன் தொடர்பில் இருந்தோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குடும்பத்தினர் வெளியில் வருவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட ஆட்சியர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையும் மீறி வெளியில் வருவோர் மீது அபராதம் விதிப்பதோடு, தகுந்த பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மேற்கண்ட இந்த அனைத்து நடவடிக்கைகளும், பொது மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் எடுக்கப்படுபவை. இதனை உணர்ந்து, அரசின் உத்தரவுகளை பொது மக்கள் தவறாது தீவிரமாக கடைப்பிடித்து, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

விழித்திரு – விலகி இரு – வீட்டிலேயே இரு என்ற கோட்பாட்டினை இந்த சவாலான நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் தீவிரமாகக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x