

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தன் ஒரு மாத ஓய்வூதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக, பாமக தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தன் ஒரு மாத ஓய்வூதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக, பாமக தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.மணி இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இயன்றவர்கள் நிதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதையேற்று, கரோனா தடுப்புப் பணிகளுக்கு உதவும் வகையில், எனது மார்ச் மாத ஓய்வூதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறேன். சட்டப்பேரவைச் செயலகம் வழியாக இந்தத் தொகை முதல்வரின் பொது நிவாரண நிதியில் சேர்க்கப்படும்" என தெரிவித்துள்ளார்.