

உழவர்கள் காய்கறி/ பழங்கள்/ கீரைகள் ஆகியவற்றை சந்தைக்கு அன்றாடம் கொண்டு வரும் விவசாயிகள் காவலர்கள் தடுத்து தாக்கும் நிலை உள்ளது. வேளாண் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டும் உத்தரவு காவல்துறையினருக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படாமல் இருந்தால் அது சரிசெய்யப்பட வேண்டும் என விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“உலகையே அச்சுறுத்தும் கரோனா தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு எடுத்து வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் விலைகள் அபரிமிதமாக உயராமல் இருக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உழவர்கள் காய்கறி/ பழங்கள்/ கீரைகள் ஆகியவற்றை சந்தைக்கு அன்றாடம் கொண்டு வந்துதான் தீர வேண்டும். இல்லையென்றால் பெருத்த நட்டத்திற்கு விவசாயிகள் ஆளாவதுடன், வீணாகி யாருக்கும் பயன்படாமல் போய்விடும். மக்களுக்கு மேற்படி பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அன்றாடம் பொருட்கள் சந்தைக்கு வருவதும் அவசியம்.
இது தொடர்பாக 24.3.2020 அன்று தமிழக அரசின் வேளாண்மை துறை வெளியிட்டு வழிகாட்டுதல்கள் அடிப்படையில் அதிகாரிகளும், காவல்துறையினரும் செயல்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். விற்பனை செய்ய வந்த விவசாயிகளை தடுத்ததால் பல இடங்களில் விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
வேளாண் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டும் உத்தரவு காவல்துறையினருக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படாமல் இருந்தால் அது சரிசெய்யப்பட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளிவந்தவர்கள் மீது உட்பட பல இடங்களில் காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தியுள்ளது.
பணி முடிந்து திரும்பிய ஒரு மருத்துவர் மீது காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. எனவே, தமிழக அரசு வரும் நபர்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பது, இடைவெளியை கடைப்பிடிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற வகையில் செயல்படுமாறு காவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது”.
இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.