

நள்ளிரவில் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி சிலர் தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் உலா வருகின்றனர். இதனைத் தடுக்கும் விதமாக புதுவையில் கட்டுப்பாடு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
முக்கிய வீதிகளில் போலீஸார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். மருந்துகள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குபவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்று திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனை முதல்வர் நாராயணசாமி நேற்று (மார்ச் 25) நள்ளிரவு சென்று ஆய்வு செய்தார். அப்போது, ஒரு மருந்துக் கடையில் 5 பேருக்கு மேல் இருந்தனர். மேலும், மக்கள் இடைவெளி விட்டு நிற்க ஒரு மீட்டர் அடையாள குறியீடும் அமைக்கப்படவில்லை.
இதனைக் கண்ட முதல்வர் நாராயணசாமி, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து நகரப் பகுதி முழுவதையும் அவர் காரில் சென்று பார்வையிட்டார்.