ஊரடங்குத் தடையை மீறி குமரி வீதிகளில் சுற்றிய 11 பேர் மீது வழக்கு: ட்ரோன் மூலம் கண்காணிப்பு

ஆளில்லாத விமானத்தை இயக்கி, கண்காணிக்கும் எஸ்.பி ஸ்ரீநாத்
ஆளில்லாத விமானத்தை இயக்கி, கண்காணிக்கும் எஸ்.பி ஸ்ரீநாத்
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியிலும் ஊரடங்கு உத்தரவின் எதிரொலியாக இரண்டாவது நாளான இன்றும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தீயணைப்புப் பணியாளர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் சேவை, பத்திரிகையாளர்கள் ஆகியோரைத் தவிர்த்து மற்றவர்கள் சாலையில் நடமாட போலீஸார் தடை விதித்தனர். ஊரடங்கின் முதல் நாளான நேற்று சாலையில் சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீஸார் கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று காலையில் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியிலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மிக அவசியமான தேவை இல்லாமல் சாலையில் சுற்றுவோர் குறித்த புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் போலீஸார் அவர்கள் மீது வழக்கு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சாலையில் தடையை மீறிச் சுற்றி வந்த 11 பேர் மீது மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையப் பகுதியில் இன்று காலை குமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் ஆய்வுசெய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''குமரி மாவட்டம் அதிக அளவில் சுற்றுலாத் தலங்கள் நிறைந்த மாவட்டம். அதேபோல் இங்கு கடற்கரைப் பகுதிகளும் அதிகம். இந்தப் பகுதிகளை ஆள் இல்லாத விமானம் மூலம் கண்காணிப்பு செய்கிறோம். வெளிநாடுகளில் இருந்து யார் சொந்த ஊருக்கு வந்தாலும் மாவட்ட நிர்வாகம் அல்லது காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.

ஊரடங்குக் காலத்தில் தடையை மீறி வெளியே வருவோர் மீது வழக்கு பாய்வதால் வெளியில் வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in