

தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணங்கள், இன்னும் ஓரிரு நாள்களுக்குள் போய்ச் சேரவில்லை என்றால், கூலித்தொழிலாளர்கள் பட்டினி கிடப்பதைத் தவிர வேறு வழி இல்லை என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிக்கையில், "நான்கு லட்சம் மக்களைப் பாதித்து, 20 ஆயிரம் உயிர்களைக் கொள்ளை கொண்டு, ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் உறைய வைத்து இருக்கின்ற, கரோனா வைரஸ் தொற்று, அறிவியலில் சாதனைகள் படைத்த நாடுகளையே, எப்படி இந்த நோயை எதிர்கொள்வது எனத் தடுமாறித் திணற வைத்துவிட்டது.
130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், ஏப்ரல் - மே மாதங்களில் 13 கோடி முதல் 25 கோடிப் பேரைத் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில், குறைந்தது 60 ஆயிரம் பேர் முதல் ஆகக்கூடுதலாக 1 லட்சம் பேர் தீவிர நோயாளிகள் ஆகும் ஆபத்து இருக்கின்றது என்பதையும் தெரிவித்துள்ளனர்.
21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் அறிவித்து இருக்கின்றார். அதற்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று கைகூப்பிக் கேட்டுள்ளார். ஆனால், இந்த அபாயகரமான எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு, பொதுமக்கள் தெருக்களில் உலவுவதும், கூட்டம் கூடுவதும் பேராபத்தில் முடியும். அத்தியாவசியக் கடமைகளைச் செய்யும் மருத்துவத் துறைப் பணியாளர்கள், காய்கறிகள், பால், உணவுப் பொருட்களை விநியோகம் செய்வதற்கும் இடையூறு ஏற்பட்டு விடுகின்றது.
பிற உயிர்களைக் காப்பாற்ற மட்டும் அல்ல, தங்கள் உயிர்களையும், மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர்களின் உயிர்களையும் காப்பாற்றிக்கொள்ளக் கருதியாவது, ஒவ்வொருவரும் கண்டிப்பாகத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். .
இந்தப் பிரச்சினையில், காவல்துறை இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டே தீரும்.
அத்தியாவசியப் பால், உணவு, கய்கறிகள் போன்ற அடிப்படைத் தேவைப் பொருட்களைக்கொண்டு செல்வோர், மருத்துவப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போன்றோருக்குத் தொல்லை ஏற்படாமல் காவல்துறை பார்த்துக்கொள்ள வேண்டும்.
அன்றாட வேலை செய்து, அதில் கிடைக்கின்ற வருமானத்தில் வாழ்க்கை நடத்துவோருக்கு, அரசாங்கம் உதவிகளை அறிவித்து இருந்தாலும், ரேஷன் பொருட்கள், நிவாரணத் தொகை, இன்னும் ஓரிரு நாள்களுக்குள் போய்ச் சேரவில்லை என்றால், அவர்கள் பட்டினி கிடப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
ரேஷன் அட்டைகள் இல்லாதவர்களுக்கும் மனிதாபிமானத்தோடு, அரசாங்கம் நிவாரணப் பொருட்களையும், உதவித் தொகையையும் வழங்க வேண்டும்.
சிறு, குறு தொழில் முனைவோர், கடனுக்கு வாகனங்கள் வாங்கியோருக்கும், மாதத் தவணை செலுத்தும் காலக்கெடுவை மூன்று மாதங்கள் நிறுத்தி வைக்க வேண்டும்.
அரசாங்கம் தனது கடமையைச் செய்வதற்குத் தடங்கலாக, பொதுமக்கள் தெருக்களுக்கு வரக்கூடாது.
அரசு மேற்கொண்டுள்ள கரோனா தடுப்புப் பணிகளுக்கு உதவியாக, நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்குகிறேன்" என வைகோ தெரிவித்துள்ளார்.