

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பரிசோதனை முடிவுகள் வரும் முன்பாகவே அவர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 10க்கும் அதிகமானோர் கரோனா அறிகுறியோடு அட்மிட் செய்யப்பட்டிருந்தாலும், யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை. இதனால் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கோடிமுனை பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரது சளி மாதிரி, நெல்லை அரசு மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது. அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை. இந்நிலையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 40 வயது நபர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவருக்கு ஏற்கெனவே கல்லீரலில், மூளைக்காய்ச்சல் பிரச்சினை இருந்ததாகவும், அந்த நோய் மிகத்தீவிரம் அடைந்ததாலுமே இறந்திருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் கடந்த மார்ச் 3-ம் தேதி குவைத் நாட்டில் இருந்து, சொந்த ஊருக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, மூன்று தினங்களுக்கு முன்பு கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயதுப் பெண் ஒருவர் இறந்தார். இறப்புக்குப் பின்னர் வெளியான அவரது சளி பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அதேநேரம் அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே இதயநோய் உள்ளிட்ட வேறு சில உபாதைகளும் இருந்ததாலேயே அந்த உயிரிழப்பு நடந்ததாகவும் தெரியவந்தது. கரோனா வார்டில் சிகிச்சையில் இருப்போரிடம் தன்னம்பிக்கை குறைவாக இருப்பதும், நோய் குறித்த அச்ச உணர்வு அதிகமாக இருப்பதும் உயிரிழப்புக்கு வழிவகுப்பது குறிப்பிடத்தக்கது.