

21 நாட்கள் ஊரடங்கு அறிவித்திருக்கும் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதல் முக்கியக் கட்டமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 600-ஐத் தாண்டிவிட்டது. தமிழகத்திலும் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரையும் வீட்டிற்குள்ளேயே இருக்கத் தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இது தொடர்பாகத் தமிழக முதல்வர், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:
"அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் தினசரி கொத்து கொத்தாக மனித உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐத் தாண்டிவிட்டது. தமிழகத்தில் 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி, பிரதமர் மோடி பிறப்பித்திருக்கும் உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இப்போது அறிவித்துள்ள சலுகை திட்டங்களை வரவேற்கின்ற அதே சூழலில் இவை போதுமானது அல்ல. தொழிலாளர்கள், சிறு குறு வணிகர்களால் 3 வார கால இழப்பை நிச்சயமாகத் தாங்க முடியாது. இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சோதனையைச் சுகாதார பேரிடராக மட்டுமன்றி, பொருளாதார பேரிடராகவும் கருதி மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.
இலவச உணவு, மளிகைப் பொருட்கள், அன்றாட ஊதியம், உதவித் தொகைகள், வரி விலக்கு, மானியங்கள், கடன்கள், கடன்களைத் திரும்பச் செலுத்தக் கால அவகாசம் ஆகியவற்றுக்காக ஒரு பெரும் தொகையை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாநில அரசு அறிவித்துள்ள 1000 ரூபாய் போதுமானது அல்ல. நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிடத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 1000 ரூபாயை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர், ஊடகத்துறையைச் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உங்கள் பணி என்பது எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்களின் பணியைப் போல மிகவும் மகத்தானது.
நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எதையும் எதிர்கொள்ளும் வல்லமை நம்முடைய அறிவியலுக்கும் உண்டு. உடலுக்கும் உண்டு, உள்ளத்துக்கும் உண்டு என்ற நம்பிக்கையுடன் தனித்திருப்போம்! விழித்திருப்போம்!".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.