மளிகைப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று டெலிவரி செய்வதில் எந்தத் தடையும் இல்லை: சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
Updated on
1 min read

பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை வீட்டுக்கே சென்று டெலிவரி செய்வதில் எந்தத் தடையும் இல்லை என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி இன்று (மார்ச் 26) தொடங்கியது. இப்பணிகளை ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசியதாவது:

"கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மருத்துவர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பது, ரயில் நிலையம், விமான நிலையங்களில் சிக்கித் தவித்தவர்களை 20 முகாம்களில் தங்க வைத்து அவர்களைக் கண்காணித்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

144 தடை உத்தரவு நடைமுறைக்கு வந்த பிறகு, பெரும்பாலான இடங்களில் கூட்டம் இல்லாமல் கட்டுப்படுத்தப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ட்ரோன் தொழில்நுட்பம் மூலம், கூட்டம் அதிகமாக இருக்கும் மார்க்கெட், குடிசைப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியின் முன்னோட்டம் இன்று நடைபெற்றது. இம்மாதிரி 4 சாதனங்கள் உள்ளன. இதன் மூலம், 2 லட்சம் சதுர அடிக்கு மேலான பரப்பளவில் கிருமி நாசினி தெளிக்கப்படும்.

தனியார் நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் போன்றவை மளிகைப் பொருட்களை வீடுகளுக்கு வந்து டெலிவரி செய்வதில் தடை இல்லை. தொலைபேசி மூலமாகவோ, இணையம் மூலமாகவோ மளிகைப் பொருட்களை மக்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நெருக்காமல் பரவலாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது".

இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in