Published : 26 Mar 2020 10:18 AM
Last Updated : 26 Mar 2020 10:18 AM

கரோனா: விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; ஜி.கே.வாசன்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் விவசாயத் தொழிலில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவிலும் கரோனா என்ற எதிர்பாராத கொடிய நோயால் அனைவருமே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக, சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில், கட்டுமானத் தொழில், வேளாண்மைத் தொழில் போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வங்கிகளில் கடன் வாங்கி தொழிலில் ஈடுபட்டவர்கள்.

தற்போதைய கரோனா பாதிப்பால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பை இழந்து, வருவாய் ஈட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கியில் கடன் வாங்கியவர்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணையை செலுத்த முடியாத காரணத்தால் தவணையை செலுத்த குறைந்தபட்சம் 6 மாத காலம் தள்ளிவைக்க வேண்டும்.

இப்படி தவணைக்கான காலத்தை தள்ளி வைக்கும்போது இந்த 6 மாத காலத்திற்கு கூடுதல் வட்டி எதுவும் வசூலிக்கக் கூடாது. முடியுமானால் இந்த 6 மாத காலத்திற்கான வட்டி விகிதத்தைக் குறைக்கவோ அல்லது சலுகை அளிக்கவோ முன்வர வேண்டும்.

விவசாயத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை மேலும் கால தாமதம் ஆகாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு மக்காச்சோளம் ஒரு குவிண்டால் விலை ரூ.1,850 ஆக இருந்தது. இப்போதைய கரோனா பாதிப்பால் மக்காச்சோளம் தேக்கமடைந்திருப்பதோடு, ஒரு குவிண்டால் விலை ரூ. 1,450 ஆக இருக்கிறது.

ஆகவே, மக்காச்சோளத்தை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா வைரஸின் பரவல் காரணத்தால் அனைவரும் அச்சமடைந்திருப்பதோடு, பல தரப்பினர் அன்றாட வாழ்க்கைக்கே வருமானம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வங்கி வட்டிக்கான தவணையை தள்ளி வைக்கவும், மக்காச்சோளத்தை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யவும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x