

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி அதிகாரிகளின் வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்றது. அதிகாரிகளுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும் என்எல்சி நிறுவனத்துக்கு சொந்தமான 2 பேருந் துகள் உட்பட 5 பேருந்துகள் சேதமாகின. இந்த தாக்குதலில் அதிகாரிகளின் குடும்பத்தினர் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நெய்வேலியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள் அனைவரும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தொமுச நிர்வாகியை பணிநீக்கம் செய்ததால் ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, கடந்த 14-ம் தேதி முதல் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். தொழிலாளர்கள் 97 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலையில் இருந்தே மர்ம நபர்கள் சிலர் என்எல்சி உயர் அதிகாரிகள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, அங்கிருந்த அதிகாரிகளின் வீடுகள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், அதிகாரிகளின் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் அடித்து நொறுக்கினர். அதில், 50க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த தாக்குதலில், அதிகாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதேபோல, நேற்று அதிகாலை புதுச்சேரியில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த புதுச்சேரி அரசு பேருந்து, நெய்வேலி டவுன்ஷிப்பில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்து, ஒரு தனியார் பேருந்து, என்எல்சி நிறுவனத்துக்கு சொந்தமான 2 பேருந்து என மொத்தம் 5 பேருந்துகளின் கண்ணாடிகளை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் உடைத்தது.