Published : 26 Aug 2015 07:36 AM
Last Updated : 26 Aug 2015 07:36 AM

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் காற்றின் தரத்தை அறியும் கருவியை வானில் செலுத்தி சாதனை

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் நாட்டிலேயே முதல்முறையாக விண்வெளிக்கு அருகில் கருவியை செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது மறைந்த விஞ்ஞானி ஏ.பி.ஜெ.அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்துவதாக அமைந்தது.

இது தொடர்பாக ஸ்பெஸ் கிட்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அண்டுதோறும் “இந்திய இளம் விஞ்ஞானி” போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்டம் பள்ளம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ரிஃபாத் ஷாருக் என்ற மாணவர் குறைந்த உயரத்துக்கு விண்வெளி வாகனத்தை செலுத்தி காற்றின் தரம், உயரம், விண்ணில் உள்ள வாயுக்கள் பற்றி அறிவது குறித்து விளக்கினார்.

இதற்கு பலரிடமிருந்து எதிர்மறை யான பதிலே வந்தது. ஆனாலும், ரிஃபாத், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா இயக்குநர் ஸ்ரீமதி கேசன் ஆகியோர் இதை எப்படியாவது செய்ய வேண்டு மென 2 ஆண்டுகளாக முயன்று வந்தனர். பல்வேறு ஆய்வு நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டது. ஆனால், பலர் இது வேலைக்கு ஆகாது என கூறிவிட்டனர்.

எனவே கருவியை விண்வெளியில் செலுத்த முடியவில்லையென்றாலும் விண்வெளிக்கு அருகில் கருவியை செலுத்தி ஆய்வு செய்ய திட்டமிடப்பட் டது. நாசாவைச் சேர்ந்த சில கல்வி யாளர்கள், மத்திய ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில பேராசிரியர்கள் இத்திட்டத்துக்கு உதவி புரிந்தனர்.

முடிவில் ஹீலியம் வாயுவால் பறக்கும் பலூனை உருவாக்கி, 10 வகை யான சென்சார்களை ஒரு பாதுகாப்பான பெட்டிக்குள் வைத்து அதனுடன் பாராசூட்டை இணைத்து ஒரு புதுவிதமான கருவி தயாரிக்கப்பட்டது. இதன் மொத்த எடை 1680 கிராம். இந்துஸ்தான் பல்கலைக்கழக இணை வேந்தர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் இதை பாராட்டி ஒத்துழைப்பு வழங்கினார். அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யக்ஞசாய், வினய், தனிஷ்க், வின்யாஸ், நிதின், தெபான்ஜெனா, முகமத் காசிப், ரங்கா சேய்ஸ், சாய் தர்ஷன் ஆகியோரும் ஏரே ஸ்பேஸ் துறை பேராசிரியர் கிருபாகரனும் தயாரிப்புப் பணியில் உதவி புரிந்தனர்.

உபகரணத்தை பறக்கவிட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டு கடந்த 23-ம் தேதி வானில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி குறிப்பிட்ட உயரத்தில் பலூன் வெடித்து பாராசூட் மூலம் சென்சார்கள் அடங்கிய பெட்டி பத்திரமாக தரையிறங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் குத்துனூரில் தரையிறங்கிய அந்த கருவியிலிருந்து ஆய்வு தொடர்பான தகவல்கள் பெறப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x