

கரோனா தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொருவரும் 5 அடி இடைவெளி விட்டு நின்று அத்தியாவசிய பொருட்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மீன் மார்கெட் பகுதியில் எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும். இந்தப் பகுதியில் 5 அடி இடைவெளியில் கட்டங்கள் போடப்பட்டு அந்த கட்டங்கள் வழியாக வரிசையில் சென்று பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் மார்கெட் பகுதி, அத்தியாவசிய பொருள்கள் விற்கும் கடைகள், மருந்துக் கடைகள் ஆகிய பகுதிகளுக்குச் சென்றும் பொருட்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை அறிவுறுத்தல்கள்
அதேபோல் காவல் துறை சார்பிலும் சில அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி மற்றும் காவல்துறை அலுவலர்கள் விவாதித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு ஒரு குடும்பத்தில் ஒரு நபரை மட்டும் தேர்வு செய்து வெளியில் அனுப்ப வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை வாங்க ஒரு பை, ஒரு பணப்பையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். ஒருமுறை வெளியில் செல்லும்போது அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும்.
கைப்பேசி எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். வலது கை பழக்கம் உள்ளவர்கள் இடது கையாலும், இடது கை பழக்கம் உள்ளவர்கள் வலது கையாலும் கதவை திறக்கலாம். வெளியே செல்வதற்கு ஒரேவாகனம், சாவியை பயன்படுத்துங்கள். அந்த சாவியை தனியாக வையுங்கள். நீங்கள் வீடு திரும்பிய உடன் உங்கள் ஆடை, பணப்பை, துணிப்பை ஆகியவற்றைத் தனியாக வைக்க வேண்டும். கை, கால், முகம் ஆகியவற்றைச் சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.