அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோருக்காக சென்னை, புறநகர்களில் இருந்து 200 மாநகர பேருந்துகள் இயக்கம்

அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு அரசு துறைகளின் பணியாளர்களுக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் சமூக இடைவெளியோடு பயணிக்கும் பணியாளர்கள்.
அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு அரசு துறைகளின் பணியாளர்களுக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் சமூக இடைவெளியோடு பயணிக்கும் பணியாளர்கள்.
Updated on
1 min read

மருத்துவம், துப்புரவு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிக்கு செல்வோருக்காக மட்டும் சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கோ.கணேசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் முதல்வர் உத்தரவின்பேரில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் நலன் கருதி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் ஊழியர்கள் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வரும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 பேருந்துகள், ஒப்பந்த ஊர்திகளாக நேற்று இயக்கப்பட்டன.

தலைமைச் செயலக அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிக்கு வந்து செல்ல ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கப்பெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பூந்தமல்லி, மணலி, எண்ணூர், நெற்குன்றம், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவசரப் பணிகளுக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் போதிய பேருந்துகளும் ஓட்டுநர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in