

கரோனா வைரஸ் பரவுவதைத்தடுக்க வங்கிப் பரிவர்த்தனை நேரத்தை குறைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பின் தமிழக பிரிவு, அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், வங்கிகளில் சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. இதன்படி, பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை செலுத்துதல் மற்றும் அரசாங்கபரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளையும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து ஏடிஎம் மற்றும்பணம் செலுத்தும் இயந்திரங்களிலும் போதிய அளவு பணம்இருக்குமாறு உறுதி செய்துகொள்ள வேண்டும். பரிவர்த்தனைக்காக பெறப்படும் காசோலைகளை வங்கிகளில் கையில் வாங்குவதற்குப் பதிலாக அதற்குரிய பெட்டியில் இடுமாறு அறிவுறுத்த வேண்டும்.
என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளை இணையதளம் மூலம் மேற்கொள்ள வேண்டும். வங்கிகளில் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 50 சதவீத ஊழியர்களை சுழற்சி முறையில் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளபகுதிகளில் இருக்கும் வங்கிக்கிளைகள், மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவுப்படி மூடப்பட வேண்டும்.