Published : 26 Mar 2020 06:36 AM
Last Updated : 26 Mar 2020 06:36 AM

சமைத்த உணவை யாருக்கும் விநியோகிக்க கூடாது: தன்னார்வலர்கள், அமைப்புகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை

சென்னையில் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள், சமைத்த உணவுகளை யாருக்கும் விநியோகிக்க கூடாது என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் வெளியூர் செல்லவிருந்த 1,727 பயணிகள் மாநகராட்சியின் சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 1,454 வீடற்றோர் காப்பகங்களில் தங்கியுள்ளனர். தற்போது மேலும் 610 பேர் கூடுதலாக தங்கியுள்ளனர்.அவர்களுக்கு உணவு மற்றும்மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும், சமுதாய கூடங்கள்மற்றும் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கவும் ஆர்வமுள்ள தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மாநகராட்சியின் www. chennaicorporation.gov.inஎன்ற இணையதளத்தில் தங்கள்விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம். தங்களால் வழங்கக்கூடிய உபகரணங்கள், உதவிப்பொருட்கள் மற்றும் பொருட்களின் விவரங்களை 044 – 25384530 என்ற 24 மணி நேரம் இயங்கும் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இது தொடர்பாக விவரம் பெற நேரில் வருவதை ஏப்ரல் 14-ம் தேதி வரை தவிர்க்க வேண்டும்.

தன்னார்வ தொண்டு அமைப்புகள், தன்னார்வலர்கள், சமைத்த உணவுகளை யாருக்கும் விநியோகிக்க கூடாது. அதன் மூலமும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. எனவே, தன்னார்வ தொண்டு அமைப்புகள் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சானிட்டரி நாப்கின், சாம்பார், ரசப் பொடி போன்ற அத்தியாவசிய திடப் பொருட்கள், முகக்கவசங்கள், கிருமிநாசினி, கைகளை சுத்தம் செய்யும் சோப்பு திரவம் மற்றும் லைசால் ஆகிய பொருட்களைகீழ்ப்பாக்கம், எண்.82/1, விளையாட்டு திடல் தெருவிலுள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கத்திலும், அண்ணா நகர் கிழக்கு, ஏ பிளாக், 1-வது தெரு, குமரன் நகரில் உள்ள அம்மா அரங்கத்திலும் வழங்கலாம்.

மேலும் நன்கொடை வழங்க விரும்புபவர்கள் பின்வரும் கணக்கு குறியீட்டு எண்ணில் அல்லது காசோலை மூலம் in favour of “THE COMMISSIONER, GREATER CHENNAI CORPORATION” என்றபெயரிலும் செலுத்தலாம். மின்னணுமுறையில் THE COMMISSIONER, GREATER CHENNAI CORPORATION – CSR என்ற பெயரில் ICICI BANK NUNGAMBAKKAM BRANCH, AC. No. 000901126630, MICR NUMBER 600229003, IFSC CODE ICIC0000009 என்ற வங்கி கணக்கிலும் நன்கொடையை செலுத்தலாம். இதுதொடர்பான விவரங்களை அறிய 044-25384530 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x