

கரோனாவால் தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஆறுதல் தரும் விதமாக கரோனா பாதிப்புக்குள்ளான வடமாநில இளைஞர் சிகிச்சையில் குணமடைந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரோனாவின் பாதிப்பு இந்தியாவில் பரவ தொடங்கினாலும் தமிழகத்தில் அதன் பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஓமனிலிருந்து சென்னை திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவரும் சிகிச்சையில் குணமடைய கரோனா இல்லாத மாநிலம் என விஜய பாஸ்கர் அறிவித்தார். அவர் அறிவித்த ஓரிரு நாளில் டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் திரும்பிய உபி இளைஞர் ஒருவர் கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டார்.
உபியைச் சேர்ந்த அந்த இளைஞர் வேலைத்தேடி இந்த மாதம் தொடக்கத்தில் டெல்லிச் செல்ல அங்கு சில நாள் இருந்த நிலையில் உடல்நலம் பாதித்ததால் நண்பர்களிடம் சொல்லிவிட்டு 10-ம் தேதி ரயிலில் ஏறி 2 நாள் பயணம் செய்து 12-ம் தேதி சென்னை வந்தவர் அரும்பாக்கத்தில் நண்பர்களுடன் அறையில் தங்கியுள்ளார்.
16-ம் தேதி காய்ச்சல் அதிகமானதால் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் அறையில் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ரயிலில் பயணித்தவர்கள் பட்டியலும் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் பலர் கண்டறியப்பட்டாலும், வெளிநாட்டிலிருந்து வராமல் டெல்லியில் கரோனா தொற்றுக்கு ஆளானவர் இந்த இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் மேலும் பலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 ஆனது. இதில் மதுரையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். காஞ்சிபுரம் பொறியாளர் குணமாகி வீடு சென்றுவிட்டார்.
இந்நிலையில் டெல்லி இளைஞரும் குணமாகியுள்ளார். இதனால் நோய்த்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20 ஆக உள்ளது.
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள ட்வீட்:
“தமிழகத்தில் 2 வது கரோனா தொற்று நோய் நபர் குணமடைந்தார். டெல்லியிலிருந்து சென்னை வந்த அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது நன்றாக குணமடைந்துள்ளார். அவருக்கு 2 சோதனைகள் எடுக்கப்பட்டதில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது அவர் 2 நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்”.
என்று தெரிவித்துள்ளார்.