

கரோனாவுக்கு எதிராக நாடே ஊரடங்கு கடைபிடித்து வீடுகளில் இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சூளைமேட்டில் நிலைமையின் தீவிரத்தை உணராமல் சாலையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரோனா தொற்று ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த நிலையில் அதன் தீவிரம் அதிகரித்த நிலையில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. பள்ளிக்கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது. நாளாக நாளாக கரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்ததை அடுத்து மேலும் நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டது.
21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சமுதாய தனிமை என்பது கடுமையாக்கப்பட்டது. யாரும் வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் வெளியே வரக்கூடாது என்றூத்தரவிடப்பட்டது.
ஆனாலும் அதை மதிக்காத நபர்கள் சாலையில் மோட்டார் சைக்கிளில் சுற்றுவது, கும்பலாக கூடுவது, திரிவது என்பதை செய்ய போலீஸார் கடுமையாக எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி சூளைமேட்டில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் 5 பேரை அவ்வழியாக ரோந்து வந்த சூளைமேடு போலீஸார் பிடித்து ஐபிசி பிரிவு 269 (தொற்று நோய் பரப்பும் விதமாக செயல்படுதல் தடைச் சட்டத்தின்) கீழ் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விபரம் 1.சூளைமேடு சர்புதீன் தெருவைச் சேர்ந்த ராஜ்கபூர்(26), 2. வினோத்குமார்(27), 3.வீரபாண்டியன் (22), 4.சாந்தன் (27), 5.விக்னேஷ்(22) ஆகியோர் ஆவர். இதேப்போன்று சாலையில் சுற்றித்திரிந்த சூளைமேடு கான் தெருவைச் சேர்ந்த யூகேஷ்(36), சித்தார்த்(36) ஆகியோரும் ஐபிசி 269-ன் கீழ் கைது செய்யப்பட்டனர்.