

மதுரை மாவட்டத்தில் ‘கரோனா’ அறிகுறி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை தற்காலிகமாக ‘கரோனா’ மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தமிழகத்திலே முதல் முறையாக ‘கரோனா’ பாதித்த நோயாளி இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். 15-க்கும் மேற்பட்டோர் தற்போது அறிகுறிடன் மதுரை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ‘கரோனா’ சிகிச்சை சிறப்பு பிரிவு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிகுறி நோயாளிகள் எண்ணிக்கையும், ‘கரோனா’ பாதிப்பு உறுதிசெய்யப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் அடுத்தடுத்து நாட்களில் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அதனால், இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், பழையகட்டிடத்தில் 120 வார்டு, பழைய டெங்கு வார்டு, அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அமைந்துள்ள பிரத்யேக வார்டு, மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்படும் முதுகலை மருத்துவ மாணவர்களின் விடுதி மற்றும் தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை ஆகிய 4 இடங்கள் தயார் செய்யப்பட்டன.
இதில், தற்போது தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனை, தற்காலிக ‘கரோனா’ சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
அங்குள்ள காசநோய் உள் நோயாளிகள், அந்த வளாகத்திலே மற்றொரு குறிப்பிட்டசில வார்டுகளுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
‘கரோனா’ நோயாளிகளுக்கு சிறப்பு வார்டுகள் உருவாக்கி, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு 95 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக கரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.